ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இரண்டாவது எடிசன் நேற்று முன்தினம் மலேசியாவில் நடந்து முடிந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது இந்திய அணி.
இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஓப்பனிங் இறங்கி ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் அடித்து ஆட்டநாயகி விருது பெற்றதுடன், தொடர் முழுக்க மொத்தமாக ஒரு சதம் உட்பட 309 ரன்கள் குவித்ததால் தொடர்நாயகி விருதும் வென்றார் ஆல்ரவுண்டர் கொங்காடி த்ரிஷா.
தன்னுடைய இரண்டு வயதில் தந்தை வாங்கித் தந்த நெகிழி கிரிக்கெட் பேட்டில் தனது கரியரைத் தொடங்கிய கொங்காடி த்ரிஷா, இந்த வெற்றியின் மூலம் தன் தந்தைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். மகளின் இத்தகைய வெற்றி குறித்து பேசிய கொங்காடி த்ரிஷாவின் தந்தை, “எனது மகளுக்கு இரண்டு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம். அன்றிலிருந்தே அவருக்குப் பயிற்சியளித்து வருகிறேன். த்ரிஷாவிற்கு நான்கு வயதாக இருந்தபோது, ஜிம்மிற்கு அவளை அழைத்துச் செல்ல தொடங்கினேன். எனது வேலையை விட்டு, த்ரிஷாவிற்கு கிரிக்கெட் ஆடுகளம் உருவாக்கி பயிற்சி கொடுத்தேன்.” என்று நெகிழ்ந்தார்.
மேலும், இந்த வெற்றியைத் தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகப் பேசிய த்ரிஷா, “கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமுமாக உள்ளது. எனது பலத்தில் கவனம் செலுத்துவதே எனது திட்டம். எனது விருதை இங்கு வருகை தந்திருக்கும் எனது தந்தைக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். நாட்டிற்காக விளையாடி இன்னும் பல வெற்றிகளைப் பெறுவதே எனது லட்சியம்.” என்று கூறினார்.
அதேபோல், த்ரிஷாவின் பயிற்சியாளர் மனோஜ், “த்ரிஷா தனது வயதை விட அதிக வயதுடைய அணிகளில் விளையாட ஆரம்பித்து, சிறப்பாக விளையாடி வந்தார். `த்ரிஷா மீது நன்றாகக் கவனம் செலுத்துங்கள். எதிர்காலத்தில் அவள் சிறப்பாக வருவாள் என நினைக்கிறேன்.’ என மிதாலி ராஜ் ஒருமுறை கூறியிருந்தார்.” என்றார்.
சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றியுடன் தனது பயணத்துடன் தொடங்கி மேலும் பல சாதனைகளை நோக்கி வேட்கையுடன் இருக்கும் த்ரிஷா, இலக்கை அடைய வாழ்த்துகள்.!