சென்னை: சென்னையில் ஒரு லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு இருப்பது அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் சென்னை குழந்தைகளுக்கான பிரத்யேக புற்றுநோய் பதிவேடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. புற்றுநோய் ஆராய்ச்சி மைய இணை இயக்குநர் மருத்துவர் ஆர்.சுவாமிநாதன், குழந்தைகள் புற்றுநோய் துறைத் தலைவர் மருத்துவர் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் புற்றுநோய் தரவுகளை சேகரித்தனர்.
பாதிப்பு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சைகள், மருத்துவ நிலைகளை தொடர்ந்து கண்காணித்து பதிவு செய்தனர். அந்த விவரங்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை மக்கள் தொகை அடிப்படையிலான குழந்தை புற்றுநோய் பதிவேடு என்பது இந்திய அளவில் அத்தகைய வகைமையில் மேற்கொள்ளப்படும் முதல் ஆய்வாகும்.
சென்னை பெருநகர திசுக் கட்டி பாதிப்பு பதிவேடு (எம்எம்டிஆர்) என்ற அமைப்பானது கடந்த 1981-ம் ஆண்டுமுதல் பொதுவான மக்கள் தொகையில் புற்றுநோய் பாதிப்பு தரவுகளைச் சேகரித்து வருகிறது. குழந்தைகளுக்கென பிரத்யேக பதிவேடு நடைமுறையை, அந்த அமைப்பு கடந்த 2022-ல் தொடங்கியது. அதன் கீழ் 19 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் பாதிப்பு விவரங்கள் திரட்டப்பட்டன.
சென்னையில் மொத்தம் 17 மருத்துவமனைகளிலிருந்து அத்தகைய தகவல்கள் பெறப்பட்டன. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு தொடர்ச்சியாக நேரில் சென்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்காணித்தும் அந்த பதிவேடு தயாரிக்கப்பட்டது.
கடந்த 2022-ல் 241 குழந்தைகள் புதிதாக புற்றுநோய் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. அதில் 139 ஆண் குழந்தைகள், 102 பெண் குழந்தைகள் அடங்குவர். ரத்தம் சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதில் அதிகம். நிணநீர் மண்டல புற்றுநோய், சார்கோமா எனப்படும் மென் திசு புற்றுநோய், எலும்பு புற்றுநோய் ஆகியவற்றாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மக்கள் தொகையில் 10 லட்சத்தில் 136.3 குழந்தைகளுக்கு (லட்சத்தில் 13.6 பேர்) புற்றுநோய் இருந்தது. ஆண் குழந்தைகளின் பாதிப்பு விகிதம் 10 லட்சத்துக்கு 152.7 ஆகவும், பெண் குழந்தைகளின் விகிதம் 118.5 ஆகவும் இருந்தது. புற்றுநோய்க்கு உள்ளானவர்களில் 170 பேரின் மருத்துவ ஆவணங்கள், தரவுகள் அனைத்தும் மேம்பட்ட நிலையிலும், துல்லியமாகவும் இருந்தன.
அவர்களில் 71 சதவீத குழந்தைகள் இப்போது உயிருடன் உள்ளனர். அவ்வாறு உயிருடன் உள்ளவர்களில் 81 சதவீதம் பேர் புற்றுநோய் பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளனர். சென்னையை தொடர்ந்து தமிழக அரசுடன் இணைந்து தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கான புற்றுநோய் பதிவேட்டை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.