IPL 2025: சர்வதேச போட்டிகள், டி20 லீக் போட்டிகள், உள்ளூர் தொடர்கள் என பல்வேறு நாடுகளில் தற்போது கிரிக்கெட் உலகமே தினந்தினம் பரபரப்பாக உள்ளது எனலாம்.
தென்னாப்பிரிக்காவின் டி20 லீக்கான SA20 தொடரின் பிளே ஆப் போட்டிகள், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர், பாகிஸ்தான் – நியூசிலாந்து – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர், ரஞ்சி கோப்பை தொடர் நாக்-அவுட் சுற்று என வரிசையாக பல்வேறு போட்டிகள் காத்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக பிப். 19ஆம் தேதி தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் லீக் தொடர் மீதும் பலரின் கவனம் குவிந்துள்ளன.
IPL 2025: ஐபிஎல் தொடரின் தாக்கம்
அப்படியிருக்க, இந்த அனைத்து போட்டிகளிலும் ஒவ்வொரு வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது ஐபிஎல் ரசிகர்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் எனலாம். உதாரணத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை எடுத்துக்கொள்வோம். இவர்கள் SA20 லீக்கில் விளையாடும் டெவான் கான்வா, பதிரானா, ILT20 தொடரில் விளையாடும் சாம் கரன், இந்தியா – இங்கிலாந்து தொடரில் இங்கிலாந்து வீரர் ஜேமி ஓவர்டன், ரஞ்சி கோப்பையில் விஜய் சங்கர், அன்சுல் கம்போஜ் என பல்வேறு தொடர்களில் சிஎஸ்கே வீரர்கள் என்ன பார்மில் உள்ளனர், எப்படி விளையாடுகின்றனர் என்பதை பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
IPL 2025: சுழற்பந்துவீச்சில் மிரட்டும் இந்த 3 அணிகள்
அதேபோல் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் என ஒவ்வொரு அணிகளின் ரசிகர்களும் இப்போது என்றில்லை ஆண்டு முழுவதும் தங்கள் அணிக்கு விளையாடுபவர்கள் எப்படி விளையாடிகிறார்கள் என்பதை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அந்தளவிற்கு ஐபிஎல் தொடர் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தாக்கம் செலுத்துகிறது.
அந்த வகையில், 2025 தொடரை வெல்லப்போவது எந்த அணி என்ற பேச்சு தற்போதே எழுந்துவிட்டது. ஐபிஎல் தொடரை வெல்ல ஒரு அணியின் சுழற்பந்துவீச்சு படை எவ்வாறு இருக்கிறதோ அதை பொறுத்தே தீர்மானிக்கப்படும். சுழற்பந்துவீச்சு பலமாக இருந்தால் அந்த அணி கோப்பையை அடிக்கும் வாய்ப்பு அதிகம். அப்படியிருக்க, வரும் சீசனில் இந்த மூன்று அணிகளின் சுழற்பந்துவீச்சு படையே பலமாக தெரிகிறது. அது எந்தெந்த அணிகள் என்பதை இங்கு காணலாம்.
IPL 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கடந்த முறை கேகேஆர் கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஸ்பின் அட்டாக். வருண் சக்ரவர்த்தியின் சிறப்பான கம்பேக் மற்றும் சுனில் நரைனின் அனுபவம் அவர்களின் பந்துவீச்சில் 8 ஓவர்களை எதிரணிகளுக்கு கடினமாக்கியது எனலாம்.
அதிரடி ஓப்பனிங் கொல்கத்தா அணிக்கு கைக்கொடுத்தது என்றாலும், பல போட்டிகளை இவர்களின் ஸ்பின் படையே காப்பாற்றியது. அது தற்போது 2025 சீசனிலும் தொடர்வதால் கேகேஆர் அணி இந்த முறையும் பலமான அணியாகவே பார்க்கப்படுகிறது. தற்போது மொயின் அலி, மயங்க் மார்க்கண்டே ஆகியோரும் அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலம்.
IPL 2025: மும்பை இந்தியன்ஸ்
மும்பை அணி கடந்த 4 சீசன்களாக கோப்பையை கைப்பற்றவில்லை. சிஎஸ்கே அணி கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை கோப்பையை வென்றுவிட்டது. கேப்டன்ஸி மாற்றம் உள்ளிட்ட குழப்பங்கள் இன்னும் மும்பை அணியில் நீடிக்கும் நிலையில், தற்போது நீண்ட கால பிரச்னையாக இருந்த சுழற்பந்துவீச்சு படை இந்த முறை பலப்படுத்தப்பட்டுள்ளது. பியூஷ் சாவ்லாவை தள்ளிவிட்ட மும்பை, கரன் சர்மாவை (லெக் ஸ்பின்னர்) மீண்டும் எடுத்துள்ளது.
மேலும், மிட்செல் சான்ட்னர் (இடதுகை ஆர்த்தடாக்ஸ்), அல்லாஹ் கசன்ஃபர் (ஆப் ஸ்பின்னர்) ஆகியோரை மும்பை எடுத்திருக்கிறது. வில் ஜாக்ஸ் நன்றாக ஆப் ஸ்பின் போடக்கூடியவர். எனவே, மும்பை அணி கடந்த காலத்தை விட தற்போது சிறப்பான சுழற்பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கிறது.
IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ்
சிஎஸ்கே அணி எப்போதுமே அதன் சுழற்பந்துவீச்சு தாக்குதலுக்கு பெயர் பெற்றது. தோனி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் சுழற்பந்துவீச்சு தாக்குதலை வைத்து மட்டுமே பல சீசன்களில் பல போட்டிகளை வென்றிருக்கிறார். ஆனால், கடந்தாண்டு நல்ல ஸ்பின் அட்டாக் இருந்தும் சில காரணங்களால் ருதுராஜ் கெய்க்வாட் சரிவர அவர்களை பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.
அந்த வகையில், இந்த ஏலத்தில் ரவிசந்திரன் அஸ்வின், நூர் அகமது, ஷ்ரேயாஸ் கோபால் என மூன்று பேரை அள்ளிப்போட்டு அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது. இவர்களை தவிர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா ஆகிய ஆப்ஷன்களும் சிஎஸ்கேவிடம் இருக்கிறது. எனவே, பழைய தோனி ஸ்டைலில் சிஎஸ்கே மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு கைக்கூடி வந்துள்ளது.