புதுடெல்லி: உலகுக்கான முடிவுகளை சிலர் மட்டுமே எடுப்பார்கள்; மற்றவர்கள் அவற்றை கடைப்பிடிக்க மட்டுமே செய்வார்கள் என்ற வழக்கம் இனி இருக்க முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற 2வது ஐஐசி-ப்ரூகல் ஆண்டு கருத்தரங்கின் தொடக்க விழாவில் உரையாற்றிய ஜெய்சங்கர், மிகவும் நிலையற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இருப்பதாக சொல்லப்படும் உலகில், வலுவான இந்திய – ஐரோப்பிய உறவு ஒரு முக்கியமான உறுதிப்படுத்தும் காரணியாக இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளில் ஐரோப்பாவில் நிகழ்ந்திருக்கும் பெரிய விழிப்புணர்வை இந்தியா நிச்சயமாக அறிந்திருக்கிறது. இது, இந்தியா – ஐரோப்பா இடையேயான ஆழமான ஈடுபாட்டின் உந்துசக்தியாகச் செயல்படும். உதாரணமாக, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் நெருக்கமாக இருப்பதை நாம் ஏற்கனவே காண்கிறோம்.
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவு முன்பை விட மிகவும் முக்கியமானது. சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பிய ஆணையத்துடன் மிகவும் தீவிரமான ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
உலகம் தற்போது இரண்டு பெரிய மோதல்களைக் காண்கிறது. இவை பெரும்பாலும் கொள்கை சார்ந்த விஷயங்களாக முன்வைக்கப்படுகின்றன. உலக ஒழுங்கின் எதிர்காலமே ஆபத்தில் உள்ளது என்று நமக்குச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்தக் கொள்கைகள் எவ்வளவு சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை கடந்த கால நிகழ்வுகள் காட்டுகின்றன.
நமது நாட்டில் நிகழ்த்தப்பட்ட ஆக்கிரமிப்புகள்(ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிகழ்த்தப்பட்ட ஆக்கிரமிப்புகள்) பல பத்தாண்டுகளுக்குப் பிறகும் காலி செய்யப்படவில்லை. ஆக்கிரமிப்பு அப்படியே நீடிக்கிறது.
அதேபோல், பயங்கரவாதம் வசதியான நேரத்தில் கவனிக்கப்படவில்லை. நமது ஆசிய கண்டத்தில், சர்வதேச சட்டம் குறிப்பிடத்தக்க அளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடு, ராணுவ ஆட்சி நடக்கும் நாடு போன்ற கேள்விகள் இருந்தும்கூட சர்வதேச சட்டம் குறிப்பிடத்தக்க விளைவுகளுடன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் உள்ள நமது அண்டை நாடுகளுக்கும் மேற்கில் உள்ள நமது அண்டை நாடுகளுக்கும் வெவ்வேறு தரநிலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கொள்கைகள் கைவிடப்படக்கூடியவை என்பதோ அல்லது நாமும் முற்றிலும் உண்மையான அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதோ எனது வாதம் அல்ல. ஆனால், உலகுக்கான முடிவுகளை சிலர் மட்டும் எடுப்பார்கள்; மற்றவர்கள் அவற்றை கடைப்பிடிக்க மட்டுமே செய்வார்கள் என்பது இனி இருக்க முடியாது என்று தெரிவித்தார்.