புதுடெல்லி: தனது அரசு ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை அளித்துள்ளது என்றும், வெற்று முழக்கங்களை அல்ல என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “குடியரசுத் தலைவரின் உரை, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று எனது அரசு ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை அளித்துள்ளது. வெற்று முழக்கங்களை அல்ல. ஏழ்மையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை 50 ஆண்டுகளாக நாங்கள் கேட்டோம். ஆனால், அது நடக்கவில்லை. இப்போது 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம்.
ஏழை மக்களுக்கு நாங்கள் நிறைய செய்துள்ளோம். குடியரசுத் தலைவர் தனது உரையில் அதைப் பற்றி விரிவாகப் பேசினார். குடிசைகளில் புகைப்படம் எடுப்பவர்களுக்கு, ஏழை மக்களைப் பற்றிய விவாதம் சலிப்பை ஏற்படுத்தும். சில தலைவர்கள் தங்கள் குளியலறைகளில் ஸ்டைலான ஷவர்கள் அமைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், எங்கள் கவனம் ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் இணைப்பை வழங்குவதில் உள்ளது.
எங்கள் அரசு 12 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீரை வழங்கி உள்ளது. பல நோய்களுக்கு செலவழித்த குடும்பங்கள், குழாய் மூலம் குடிநீர் காரணமாக கோடிக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்தியதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. கண்ணாடி மாளிகை அமைக்க நாங்கள் அரசின் பணத்தைப் பயன்படுத்தவில்லை.
சேமிப்பு; வளர்ச்சி – மக்கள் பணம் மக்களுக்கே என்பதே எங்கள் மாடல். நேரடி பண பரிமாற்றத் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். இதன்மூலம், ரூ.40 லட்சம் கோடியை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளோம். ஒரு பிரதமரை (ராஜீவ் காந்தி) மிஸ்டர் கிளீன் என்று அழைப்பது ஃபேஷனாக இருந்தது. ஆனால், டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பினால், மக்களுக்கு 15 பைசா மட்டுமே கிடைக்கும் என்று அவர் ஒப்புக்கொண்டார்.
எனது அரசு ஏழைகளுக்கு 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. பெண்களின் நலனுக்காக எனது அரசு 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகளைக் கட்டி உள்ளது. அரசாங்க மின் சந்தை (GeM) கொள்முதல்கள் மூலம் எனது அரசு ரூ.1.15 லட்சம் கோடியை சேமிக்க வழிவகுத்தது. எத்தனால் கலப்பு மூலம் ரூ.1 லட்சம் கோடியை சேமிக்க வழிவகுத்தது. என்னைப் பொறுத்தவரை, இது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிதி. எனது அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ரூ.1.8 லட்சம் கோடியாக இருந்த உள்கட்டமைப்பு பட்ஜெட், இப்போது ரூ.11 லட்சம் கோடியாக உள்ளது.
அரசியலமைப்பு மற்றும் அதன் உணர்வுடன் நாங்கள் வாழ்கிறோம். கடந்த கால பிரதமர்கள் அனைவருக்குமான அருங்காட்சியகமாக பிரதமர் அருங்காட்சியகத்தை நாங்கள் நிறுவியுள்ளோம்” என்று பிரதமர் மோடி பேசினார்.