மதுரை: “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்து மக்களுக்கு எதிரான நிர்வாகம் நடைபெறுகிறது” என திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மாநிலச் செயலாளர் சேவகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் அரசப்பாண்டியன் வரவேற்றார். இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது: “தமிழகத்தில் இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தாலிபான் அரசுக்கும், இந்து விரோத தீய அரசுக்கும் சொல்கிறேன், இப்படித்தான் உத்தரப் பிரசேதத்திலும் நடைபெற்றது. அதனால் உத்தரப் பிரசேத்தில் எதிரிகள் ஆட்சிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இங்கும் ஏற்படும். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தை பங்கு போட அலையும் இந்து விரோத தீயக்கூட்டத்தை எச்சரிக்கிறேன். திருப்பரங்குன்றத்தில் முதலில் வந்தது முருகன் கோயிலா, தர்காவா? இப்போது மட்டும் ஏன் பிரச்சினை வருகிறது? திமுக வரும்போதெல்லாம் இந்து மக்களுக்கு எதிரான நிர்வாகம் நடைபெறுகிறது என்பதை யாரும் மறக்கக் கூடாது. முன்னெச்சரிக்கையாக நம்மை கைது செய்த போது போலீஸார் பயன்படுத்திய வார்த்தைகளை பதிவு செய்து, அவர்கள் மீது போலீஸில் புகாரளிக்க வேண்டும்.
மதுரை ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு சென்னை, காரைக்குடி, திருப்பூருக்கு எப்படி செல்லுபடியாகும். மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் அந்த மாவட்டத்துக்குள் மட்டும் தன் செல்லுபடியாகும். அப்படியிருக்கும் போது எங்களை கைது செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த போலீஸார்களை நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டியது நமது கடமை. நவாஸ்கனியை பார்த்தால் போலீஸாரின் கால்கள் நடுங்குகிறது. நவாஸ்கனியின் கைக்கூலிகள் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு 5 லட்சம் பேர் வந்திருப்பார்கள். எல்லோரையும் சிறையில் அடைத்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பிறப்பதற்கு முன்பே காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. சிக்கந்தர் ஏன் மலைக்கு சென்றார்? தற்போது தர்காவுக்கு செல்கிறேன் என்கின்றனர். அப்போது தர்காவும் இல்லை. காசி விஸ்வநாதர் கோயிலை இடிப்பதற்காக சிக்கந்தர் மலைக்கு சென்றார் என ஊரில் பேசுகின்றனர். இந்து கோயிலை இடிக்கச் சென்றவருக்கு தர்காவா? அரசு ஆவணங்களில் சிக்கந்தர் சமாதி கோரிப்பாளையத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அப்படி என்றால் திருப்பரங்குன்றம் மலையில் தர்கா இருப்பது போலி தானே? முருகனின் அறுபடை வீட்டை அபகரிக்கும் திட்டம் தானே? இந்த நேரத்தில் இந்துக்கள் நாம் ஒன்றாகாமல் இருந்தால் தமிழ் கடவுள் முருகனை தரித்திரனாக்கவிடுவார்கள். முதல் படை வீட்டை கூறுபோட யாருக்கும் உரிமை உள்ளது? இந்தியாவில் 1942-ல் முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை முன்வைத்தார். 1944-ல் பிரிவினைவாத மாநாடு நடைபெற்றது. அதில் ஜின்னா பேசும்போது, பாகிஸ்தான் தராவிட்டால் உள் நாட்டு போரை சந்திக்க வேண்டும் என்றார்.
அதற்கு அம்பேத்கர் பதிலளிக்கும்போது, பாகிஸ்தான் பிரிந்தாலும் உள்நாட்டு போர் போகாது என்றார். அதுதான் இப்போது நடக்கிறது. உள்நாட்டு இந்துக்களை வம்புக்கு இழுக்க நவாஸ்கனி ஆடு, கோழியுடன் மலைக்கு மேல் சென்றுள்ளார். இதை முளையிலேயே கிள்ளி எரியாவிட்டால் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியது வரும். நீதிமன்றத்தில் அரசு, அயோத்தி போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக தடை விதிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இதுதான் ஆரம்பம். அயோத்தி யுத்தம் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கியுள்ளது.
இப்போராட்டத்தில் தமிழகத்தில் இருக்கும் தாலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம். அதற்கு 2026 தேர்தலில் முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது. இந்த உறுதியுடன் இருப்போம். இந்து ஒருமைப்பாட்டை உலகுக்கு காட்டுவோம்,” என்று எச்.ராஜா பேசினார்.
பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் பேசுகையில், “ஸ்டாலின் அரசு பயந்தாங்கொள்ளி அரசு என்பது தெரியாமல் போய்விட்டது. இது டீசர். மெயின் பிக்சர் இனிமேல் தான் வரப்போகிறது. இந்த டீசரில் இந்து முன்னணி கதாநாயகன். மெயின் பிக்சரில் ஒவ்வொரு இந்துவும் கதநாயகனாக இருப்பார்கள்.
திருப்பரங்குன்றம் சின்ன ஊர். 5 மாநகராட்சி வார்டு. அதில் ஒரு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த இவ்வளவு கொடுபிடியா? 144 தடை உத்தரவு. 15 மாவட்ட எஸ்பிக்கள் போராட்டத்தை முறியடிக்க ஆலோசனை செய்துள்ளனர். மதவாத அமைப்பு, இஸ்லாமிய அமைப்புகளை கேள்வி கேட்க முடியாத போலீஸார், இந்து அமைப்புகளுக்கு இவ்வளவு கெடுபிடி விதிப்பது தான் சமய சார்பற்ற தன்மையா?
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி வெட்டுவேன் என்று சொன்ன போது, ராமநாதபுரத்தில் இந்துக்கள் வாக்குகளை பெற்று எம்.பி.யான நவாஸ்கனி மலையில் பிரியாணி சாப்பிட்ட போது வேடிக்கை பார்த்த போலீஸார், மலையின் புனிதத்தை காக்க இந்துக்கள் போராட்டம் நடத்த கெடுபிடி காட்டுகின்றனர். 2026 வரை தான் ஸ்டாலின், உதயநிதி ஆட்சி. அதன் பிறகு முருகனின் ஆட்சி வரும்” என்றார்.
ஆர்எஸ்எஸ் தென்பிராந்தியத் தலைவர் வன்னிராஜன் பேசுகையில், “இந்து சமுதாயத்தின் மனநிலை மாறி வருகிறது. அது தமிழகத்தில் மாற்றமாய் அமையப்போகிறது. அதற்கு ஆதாரம் இங்கே நிற்கும் நாம்தான் . இனிமேல் யாரும் பணம் கொடுத்து இந்துக்களின் ஓட்டுகளை வாங்க முடியாது. இந்து சமயத்தை பாதுகாப்பவர்களுக்குத்தான் இனிமேல் வாக்கு, அவமானப்படுத்தும், இழிவுபடுத்துவோருக்கு வாக்கு கிடையாது. சுயநல அரசியல் வாதிகள் மாறப் போகிறார்கள்.
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது வாயைத் திறக்க தாய்மார்கள் மூக்கை பிடிப்பார்கள். அதுபோல் சுயநல அரசியல்வாதிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு அவர்களது மூக்கைப் பிடிக்க வேண்டும். இந்துக்களின் ஓட்டுகளால் சுயநல அரசியல்வாதிகளின் மூக்கைப் பிடித்து கொட்டத்தை அடக்க வேண்டும். தற்போது இந்துக்கள் வாக்கு வங்கிகள் மூலம் பலமாகிக் கொண்டிருக்கின்றனர்,” என்றார்.
இந்து முன்னணியின் மாநில அமைப்புச் செயலாளர் ராஜேஷ் பேசுகையில், “இந்துக்களின் உரிமைக்காக போராட வந்திருக்கிறோம். கைலாசநாதர் இருக்கின்ற திருப்பரங்குன்றம் இந்துக்களின் உரிமை. இலக்கியம், புராதனம், சட்டச் சான்றுகளின்படி திருப்பரங்குன்றம் முருகனின் மலை” என்றார். இந்து முன்னணி மாவட்டப் பொதுச்செயலாளர் கலாநிதிமாறன், பழங்காநத்தம் நகர்ச்செயலாளர் சுந்தர், பாஜக மாவட்ட தலைவர் மாரிசக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐகோர்ட் அனுமதி: முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான ஒரு மணி நேரம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆர்ப்பாட்டத்தில் வெறுப்பைத் தூண்டும் முழக்கங்களைத் தவிர்க்கவும், ஆர்ப்பாட்டம் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் உயர் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடையுத்தரவை திரும்பப்பெறக் கோரியும், திருப்பரங்குன்றத்துக்கு வரவேண்டாம் என காவல் துறை வெளியிட்டிருந்த செய்தி அறிக்கையை ரத்து செய்யக் கோரியும் தொடரப்பட்டிருந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
– கி.மகாராஜன் / என்.சன்னாசி / சுப.ஜனநாயகச்செல்வம்