அபிஷேக் சர்மா பந்துவீச்சில் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் – இந்திய முன்னாள் வீரர்

மும்பை,

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபிஷேக் சர்மாவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 248 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து வெறும் 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாகவும், வருண் சக்ரவர்த்தி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் விவ் ரிச்சர்ட்ஸ், சேவாக், டிராவிஸ் ஹெட் ஆகியோர் வரிசையில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேனாக உள்ளார். அதே சமயம அவர் தனது பந்துவீச்சில் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அபிஷேக் சர்மா பந்துவீச்சில் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். அவர், இன்னும் கொஞ்சம் பந்து வீசுவதைப் பார்க்க விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் நான் அவரைப் பார்த்தபோது, அவரது சீம் நிலை சிறப்பாக இருந்தது என்பதைக் கவனித்தேன். இருப்பினும், அவர் தனது பேட்டிங்கில் செய்யும் அளவுக்கு தனது பந்துவீச்சில் அதிக முயற்சி எடுப்பதில்லை.

அவர் என்னைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், நான் அவருக்கு முதலில் அவரது பந்துவீச்சைப் பற்றிப் பேச வேண்டும் என்பதை நினைவூட்டுவேன். பேட்டிங் அவரது முதல் காதல், அவர் தொடர்ந்து அதில் சிறந்து விளங்குவார். ஆனால், அவர் நிச்சயமாக தனது பந்துவீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். ஒரு நல்ல இடது கை சுழற்பந்து வீச்சாளருக்குரிய அனைத்து குணங்களையும் அவர் கொண்டுள்ளார்.

பேட்டிங்கைப் பொறுத்தவரையில் அவர் தொடக்கத்திலிருந்தே பயமில்லாமல் விளையாடி வருகிறார். பந்து வீச்சாளரின் நற்பெயரைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. பந்து அவரது ஆர்க்கில் இருந்தால், அவர் ஷாட்டுக்குச் செல்கிறார். அவர் இயல்பாகவே அச்சமற்றவர், நான் அவரை மேம்படுத்த உதவ முடிந்தால், நான் எப்போதும் தயாராக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.