இன்னும் 134 ரன்கள்… சச்சினின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோகித் சர்மா

புதுடெல்லி,

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் ரோகித் சர்மா மேற்கொண்டு 134 ரன்கள் எடுத்தால் சச்சினின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அது குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதாவது, இந்த தொடரில் ரோகித் சர்மா இன்னும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விரைவாக 11,000 ரன்களை அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்துவார். சச்சின் டெண்டுல்கர் விளையாடிய போது தனது 276-ஆவது இன்னிங்ஸில் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 257 இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடியுள்ள ரோகித் சர்மா 10866 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அவர் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். இந்த பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி தனது 222-வது இன்னிங்ஸில் அந்த சாதனையை நிகழ்த்தி நம்பர் ஒன் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.