மும்பை,
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அந்த அணியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் வருகிற 11-ஆம் தேதிக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருக்கிறது. இதன் காரணமாக அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணியில் காயமடைந்துள்ள வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் மற்றும் விராட் கோலியின் பார்ம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனவும், கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு இது கடைசி ஐ.சி.சி. தொடராக இருக்கலாம் எனவும் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஒருநாள் உலகக் கோப்பை 2023-க்குப் பிறகு ரோகித் சர்மாவின் ஸ்டிரைக் ரேட் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. அப்போது முதல் 119-120 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். அது அவரை சிறந்த ஒருநாள் வீரராக மாற்றியுள்ளது. ரோகித், விராட் கோலிக்கு பழைய போட்டிகளில் வலுவான ரன்கள் குவித்த நம்பிக்கை இருக்கிறது. பெரிய ரன்களை குவிக்க இருவருக்கும் திறமை இருக்கிறது.
ரோகித், கோலி இருவரும் நன்றாக விளையாடினால் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியில் மிகவும் உதவிகரமாக இருக்கும். ரோகித்துடன் தொடக்க வீரராக யார் களம் இறங்குவார்கள்? என்பது முக்கியமானது. ரோகித் உடன் சுப்மன் கில் இருந்தால் இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள். ரோகித் ரன்கள் அடித்தால் அது அவரது தலைமைப் பண்பிலும் பிரதிபலிக்கும். கேப்டனாக இதுதான் அவரது கடைசி ஐ.சி.சி தொடராக இருக்கும். அதனால் இதை வென்றால் அவருக்கு சிறப்பான முடிவாக இருக்கும்.
ரோகித் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் எப்படி விளையாடினார் என்பதைப் பார்த்தோம். இறுதிப் போட்டியிலேயே அவர் அப்படித்தான் விளையாடினார். அதனால், அவர் அப்படித்தான் விளையாடுவார் என நினைக்கிறேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டைப் பொருத்தவரை விராட் கோலிக்கு எப்படி ஆட வேண்டுமெனத் தெரியும். இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்களை குவித்துள்ளார். அதனால் அவரது ஆற்றல் சாதரணமாகவே வேற லெவலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.