ஓடும் அரசு பேருந்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்த ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

சென்னை: ஓடும் பேருந்தில் ரீல்ஸ் செய்த ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்பேடு – கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் 70வி தடம் எண் கொண்ட பேருந்தில், ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன், நடத்துநர் சிவசங்கர் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, நடத்துநர் ரீல்ஸ் செய்தபடி ஓட்டுநர் அருகே வந்துள்ளார்.

இதைப் பார்த்த ஓட்டுநரும் அவருடன் ரீல்ஸ் செய்தவாறே பேருந்தை ஓட்டியுள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பொதுமக்கள், போக்குவரத்து ஆர்வலர்கள் தரப்பில் கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில், ஓட்டுநரையும், நடத்துநரையும் மாநகர போக்குவரத்துக் கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “வீடியோ பதிவு செய்த சம்பவம் குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து நிரந்தர, ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பணியின்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பேருந்தில் ஒரு நிரந்தரப் பணியாளர் இருக்க வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ள நிலையில், விதிகளை மீறி 2 தற்காலிகப் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.