மும்பை,
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுமேர் சிங்(26) மற்றும் பர்பத் பரிஹார்(40) ஆகிய இருவரும் சென்னை-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அந்த ரெயில் மராட்டிய மாநிலத்தில் உள்ள புசாவால் பகுதி அருகே சென்றபோது, சக பயணி ஒருவருடன் இருக்கைக்காக சுமேர் சிங் மற்றும் பர்பத் பரிஹார் ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர். அந்த நபர் உடனடியாக தனது நண்பர்கள் சிலரிடம் செல்போனில் பேசியுள்ளார்.
அவரது நண்பர்கள் நந்தர்பார் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். பின்னர் நந்தர்பார் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தபோது, அவர்கள் அனைவரும் ரெயிலில் ஏறி சுமேர் சிங் மற்றும் பர்பத் பரிஹாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுமேர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பர்பத் பரிஹாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஒரு மைனர் சிறுவன் உள்பட 2 நபர்களை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.