Doctor Vikatan: தலைவலித்தால் சூடாக காபியோ, டீயோ குடிப்பதைப் பலரும் வழக்கமாக வைத்திருக்கிறோம். உண்மையிலேயே சூடான காபி, டீக்கு தலைவலியைப் போக்கும் குணம் உண்டா அல்லது அது பழக்கத்தின் காரணமாக உணரப்படுகிற விஷயமா… கோல்டு காபி குடித்தாலும் தலைவலி போகுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
தலைவலிக்கும் போது கஃபைன் உள்ள உணவுப்பொருள் எதுவும் சற்று நிவாரணம் தரும். அது டீயோ, காபியோ… தலைவலி குறைய நிச்சயம் உதவும்.
தலைவலிக்கும்போது காபி குடித்தால் சரியாகிவிடும் என நினைப்பவர்கள், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பாலான தலைவலி உடலில் நீர்வற்றிப் போகும் டீஹைட்ரேஷன் பிரச்னையால் வரும். அப்படிப்பட்ட தலைவலிக்கு காபி, டீ மட்டும் குடித்தால் போதாது. நிறைய தண்ணீர் குடிப்பதை வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீர் குடித்ததும் டீஹைட்ரேஷன் சரியானாலே தலைவலி சரியாகலாம்.
சிலருக்கு சைனஸ் பாதிப்போ, அல்ர்ஜியோ இருக்கலாம். அதன் விளைவாக தலைவலி வரலாம். அதுபோன்ற நேரங்களில் ஆவி பிடிப்பதும், கூடவ நிறைய தண்ணீர் குடிப்பதும் ரொம்பவே முக்கியம். இவற்றுடன் சூடான காபி குடிப்பது, அடைபட்ட சைனஸ் துவாரங்களைத் தளர்த்தி, தலைவலியைச் சரியாக்கும்.
கஃபைன் இருப்பதால் கோல்டு காபியும் தலைவலியிலிருந்து நிவாரணம் தரும். சாதாரண காபி தயாரிக்கும் அதே டிகாக்ஷனில்தான் கோல்டு காபியும் தயாரிக்கப்படுவதால் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பலனையே தரும். ஆனால், சிலருக்கு சைனஸ் காரணமாக ஏற்பட்ட தலைவலிக்கு, சூடான காபி அருந்தும்போது சைனஸ் துவாரங்களின் அடைப்பு நீங்கி ஒருவித நிம்மதியான உணர்வைத் தரும். சளி பிடித்திருக்கும்போதும், குளிர், மழைக்காலங்களிலும் யாரும் கோல்டு காபியை விரும்ப மாட்டார்கள். அதுவே, வெயில் நாள்களில் குளிர்ச்சியாக ஏதேனும் குடிக்க நினைக்கும்போது கோல்டு காபி இதமாக இருக்கும்.
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலிக்கான மருந்துகளில் கூட கஃபைன் சேர்க்கப்படுகிறது. டீயிலும் கஃபைன் இருக்கிறது என்றாலும் ஸ்ட்ராங்கான காபி அளவுக்கு அதில் கஃபைன் இருக்காது. பிளாக் டீயில் ஓரளவு அதிக கஃபைன் இருக்கும். க்ரீன் டீ மற்றும் ஹெர்பல் டீயில் அந்த அளவுக்கு கஃபைன் இருக்காது. டீயில் உள்ள தியானின் என்ற அமினோ அமிலம் காரணமாக எனர்ஜி மற்றும் சுறுசுறுப்பு கிடைக்கும்.
அதுவே காபி குடிக்கும்போது அது அளவுக்கு அதிகமாகும்போது நெஞ்சு படபடப்பது போன்ற உணர்வு வரலாம். எனவே, பிளாக் டீ அல்லது மாச்சா எனப்படும் க்ரீன் டீ போன்றவற்றில் போதுமான அளவு கஃபைன் இருப்பதால் தலைவலிக்கு நல்லது. ஹெர்பல் டீயில் கஃபைன் இருக்காது. ஆனால், அது உங்களை ரிலாக்ஸ் செய்து உடலில் நீர்ச்சத்து வற்றிப்போகாமல் காக்கும். அதன் விளைவாகவும் தலைவலி போகும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.