Aநெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் குமார். இவர், அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் வேலை முடிந்து சாப்பிடுவதற்காக குமார், தனது வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே இளம்பெண் ஒருவர், நின்று கொண்டிருந்தார். அவர், குமாரிடம் ‘ஏதாவது சாப்பிட கொடுங்கள், பசிக்கிறது’ என்றார். இதைத் தொடர்ந்து குமார், தனது வீட்டில் உள்ளவர்களிடம் அவருக்கு ஏதாவது சாப்பிட கொடுங்கள் எனக் கூறினார்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணிற்கு வீட்டில் இருந்தவர்கள் சாப்பாடு கொடுத்தனர். அதனை வாங்கி வீட்டின் வெளியே வைத்து அந்த இளம்பெண் சாப்பிட்டு கொண்டிருந்தார். அதன்பிறகு குமார் மற்றும் குடும்பத்தினருடன் வீட்டிற்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் வெளியில் சாப்பிட்டு கொண்டிருந்த இளம்பெண், அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு, குமார் ஸ்கூட்டியை சாவியுடன் நிறுத்தியிருப்பதை பார்த்து திருடிக் கொண்டு ஓட்டிச் சென்று விட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள நாலாட்டின்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே சென்று கொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாததால் ஸ்கூட்டர் தானாக நின்று விட்டது. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண், ஸ்கூட்டியை உருட்டிக் கொண்டு சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், பைக்கை அந்த இளம்பெண் உருட்டிச் செல்வதைப் பார்த்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண், விருதுநகர், ஸ்ரீநகரைச் சேர்ந்த கஸ்தூரி என்பதும், அவர், சாலையில் உருட்டி கொண்டு வந்தது நெல்லை, தச்சநல்லூரைச் சேர்ந்த குமாரிடம் திருடிய ஸ்கூட்டர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார், ஸ்கூட்டரை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.