Deepseek: டீப்சீக் செயலிக்கு தடை விதித்த அரசு… விலகி இருக்க மக்களுக்கு அறிவுரை

Deepseek: சமீப காலங்களில் அதிக சர்ச்சையில் உள்ள விஷயங்களில் டீப்சீக்கும் ஒன்று. ஏஐ சேட்பாட் டீப்சீக் குறித்து பல வித செய்திகள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஆஸ்திரேலியா தனது அனைத்து அரசு சாதனங்களிலிருந்தும் சீனாவின் AI சாட்பாட் டீப்சீக்கை தடை செய்துள்ளது. தனியுரிமை மற்றும் தீம்பொருள் (வைரஸ்கள்) தொடர்பான அபாயங்களைக் காரணம் காட்டி, பாதுகாப்பு நிறுவனங்களின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

டீப்சீக் உருவானது எங்கே?

டீப்சீக் சீனாவை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த மாதம் இது அறிமுகப்படுத்தப்பட்டது. டீப்சீக் அறிமுகம் ஆனதிலிருந்தே இது தொழில்நுட்ப உலகில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Deepseek Ban: இந்த நாடுகளில் டீப்சீக் தடை செய்யப்பட்டுள்ளது

தென் கொரியா, இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற பல நாடுகளும் இந்த செயலியின் தரவு பாதுகாப்பு கொள்கைகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன. ஆஸ்திரேலியா இதை ஒரு படி மேலே கொண்டு சென்று அனைத்து அரசு சாதனங்களிலிருந்தும் இதை அகற்ற அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்க சைபர் பாதுகாப்பு அதிகாரி ஆண்ட்ரூ சார்ல்டன், ‘இந்த செயலி அரசாங்க அமைப்புகளின் தொடர்பில் வருவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார். மேலும், டீப்சீக் போன்ற செயலிகளால் பயனர்களின் ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்றும், சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு அபாயங்களும் அரசாங்க உத்தரவுகளும்

ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சகம், டீப்சீக் மற்றும் அதன் அனைத்து வகைகளையும் உடனடியாக அகற்றுமாறு அரசு ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செயலி ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான சைபர் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று துறை செயலாளர் ஸ்டெஃபனி ஃபாஸ்டர் கூறினார்.

டீப்சீக்கிலிருந்து விலகி இருங்கள்: மக்களுக்கு அறிவுரை

புதன்கிழமை முதல், அனைத்து பெருநிறுவனம் அல்லாத காமன்வெல்த் நிறுவனங்களும் டீப்சீக்கின் பயன்பாடு, நிறுவல் மற்றும் அணுகலை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளன. இந்த முடிவுக்கு ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சூசன் லே, பொதுமக்கள் தங்கள் தொலைபேசிகள் மற்றும் கணினிகளில் இருந்து டீப்சீக்கை அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற முடிவுகள் இதற்கு முன்பும் எடுக்கப்பட்டுள்ளன

சீனாவுடன் தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது ஆஸ்திரேலியா இதற்கு முன்பும் தடைகளை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா அதன் 5G நெட்வொர்க்குகளில் இருந்து Huawei-ஐ தடை செய்தது. இது பெய்ஜிங்கை கோபப்படுத்தியது. 2023 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் தரவு பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்க சாதனங்களில் TikTok-ஐ ஆஸ்திரேலியா தடை செய்தது.

கவலைக்குரிய விஷயமாக மாறும் டீப்சீக்

கடந்த மாதம் டீப்சீக் தனது R1 சாட்பாட் அமெரிக்க AI சாட்பாட்களை விட சிறப்பாக செயல்படுவதாகவும், ஆனால் மிகக் குறைந்த செலவில் அது செயல்படுவதாகவும் கூறியபோது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. இது சிலிக்கான் வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியது. டீப்சீக் அமெரிக்க தொழில்நுட்பத்தை ரிவர்ஸ் இஞ்சினியரிங் (நகல் எடுத்து மீண்டும் உருவாக்கும் முறை) செய்துள்ளதாக பல நிபுணர்கள் குற்றம் சாட்டினர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.