வாஷிங்டன்: காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்றும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து வாஷங்டனில் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும். மேலும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம். காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். காசாவில் உள்ள வெடிக்காத ஆபத்தான அனைத்து குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பேற்போம்.
அப்பகுதி மக்களுக்கு வரம்பற்ற வேலைகள் மற்றும் வீட்டுவசதிகளை வழங்கும் ஒரு பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா உருவாக்கும். இது முழு மத்திய கிழக்குக்கும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். மத்திய கிழக்கின் அந்தப் பகுதிக்கு பெரும் ஸ்திரத்தன்மையை இது கொண்டு வரும். அங்கு யார் வசிப்பார்கள் என்று கேட்கிறீர்கள். அது “உலக மக்களின்.” வீடாக மாறக்கூடும்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்போதைய போர் நிறுத்தம் நீடித்த அமைதியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த போர் நிறுத்தம், ரத்தக்களரி மற்றும் கொலைகளை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரும். நட்பு நாடுகளுடனான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், பிராந்தியம் முழுவதும் அமெரிக்க வலிமையை மீண்டும் கட்டியெழுப்பவும் எனது நிர்வாகம் விரைவாக செயல்பட்டு வருகிறது.
யூத எதிர்ப்பைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) மற்றும் UNRWA (UNRWA) ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது. ஹமாஸுக்கு பணத்தை வழங்கியதும் மனிதகுலத்துக்கு மிகவும் விசுவாசமற்றதுமான ஐ.நா. நிவாரண மற்றும் பணி நிறுவனத்துக்கான அனைத்து ஆதரவையும் நிறுத்தும் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஈரானிய ஆட்சி மீது அதிகபட்ச அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற எங்கள் கொள்கையை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். ஈரானுக்கு எதிராக, மீண்டும் ஒருமுறை மிகவும் ஆக்ரோஷமான சாத்தியமான தடைகளை அமல்படுத்துவோம். ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவோம். மேலும், பிராந்தியத்திலும் உலகிலும் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் ஈரானின் ஆட்சித் திறனைக் குறைப்போம்.
மக்கள் காசாவுக்குத் திரும்பிச் செல்லக்கூடாது என்று நான் நினைக்கிறேன். பாலஸ்தீனர்களுக்கு காசா மிகவும் துரதிர்ஷ்டவசமான இடம் என்று நான் கேள்விப்பட்டேன். அவர்கள் நரகத்தில் வாழ்வதைப் போல வாழ்கிறார்கள். காசா, மக்கள் வாழ்வதற்கான இடமல்ல” என தெரிவித்தார்.
அதேநேரத்தில், 45 கிலோமீட்டர் நீளமும் அதிகபட்சம் 10 கிமீ அகலமும் கொண்ட, கடலோரப் பகுதியான காசாவை அமெரிக்கா எவ்வாறு, எந்த அதிகாரத்தின் கீழ் கைப்பற்றி ஆக்கிரமிக்க முடியும் என்ற கேள்விக்கு ட்ரம்ப் நேரடியாக பதிலளிக்கவில்லை. ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.