ஓ.டி.டி தளங்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தியாவில் மட்டும் கடந்தாண்டு ஓ.டி.டி-யில் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 54 .73 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒரிஜினல் கன்டென்ட், மொபைல் ஃபோன்களில்கூட படம் பார்த்துவிடுகிற மாதிரியான வசதி போன்றவற்றை இந்த எண்ணிக்கை உயர்வதற்கான முக்கிய காரணங்கள். அப்படியான பார்வையாளர்களுக்காக அதிரடியான திரைப்படங்களை இந்தாண்டு கொண்டு வருகிறது நெட்ஃபிளிக்ஸ். அந்த லிஸ்டில் இருக்கும் முக்கியமான படைப்புகளைப் பார்ப்போமா….
டெஸ்ட்:
`Y நாட் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம்தான் இந்த `டெஸ்ட்’. ஸ்போர்ட்ஸ் டிரமா திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ – என்ட்ரி கொடுக்கிறார். இதுமட்டுமல்ல, பின்னணி பாடகி சக்தி ஶ்ரீ கோபாலன் இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் முத்திரைப் பதிக்க விருக்கிறார். திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது.
ஆப் ஜைசா கோய் ( Aap Jaisa Koi) – Hindi:
மாதவன் , `தங்கல்’ புகழ் ஃபாதிமா சனா ஷேக் நடித்திருக்கும் திரைப்படம்தான் `ஆஃப் ஜைசா கோய்’. இயக்குநர் விவேக் சோனி இயக்கியிருக்கும் இந்த ரொமான்டிக் டிராமா திரைப்படம் கூடிய விரைவில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
ஜெவெல் தீஃப் – தி ஹைஸ்ட் பிகின்ஸ் (Jewel Theif – The Heist Begins) – Hindi:
விலைமதிப்பற்ற ஒரு வைரத்தைக் கொள்ளையடிக்கச் செல்லும் ஒரு திருடனின் கதையைச் சொல்லும் திரைப்படம்தான் இந்த `ஜெவெல் தீஃப் – தி ஹைஸ்ட் பிகின்ஸ்’. சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது.
நதானியன் (Nadaaniyan) – Hindi :
நடிகர் சைஃப் அலி கானின் மகனான இப்ராஹிம் அலி கான் மற்றும் போனி கபூரின் இளைய மகளான குஷி கபூரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம்தான் இந்த `நதானியன்’. இப்ராஹிம் அலி கான் கதாநாயனாக நடிக்கும் முதல் முழு நீள திரைப்படம் இதுதான். இந்தப் படமும் இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கிறது. குஷி கபூருக்கு இந்தாண்டு அடுத்தடுத்து ரிலீஸ் காத்திருக்கின்றன. இவர் நடித்திருக்கும் `லவ் டுடே’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான `லவ்யப்ப’ திரைப்படமும் இந்த வாரம் வெளியாகிறது.
AKKA – Hindi:
1980-ல், தாய் வழி சமூகம் நடைமுறையில் இருக்கும் ஒரு கற்பனை நகரத்தில் பெண்களுக்கு பவர் இருக்கிறது. அந்த நகரத்தில் வாழும் பெண்களின் கதையை விவரிப்பதுதான் இந்த `அக்கா’ வெப் சீரிஸ். கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான `பேபி ஜான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியிருந்தார் கீர்த்தி சுரேஷ். அப்படத்தை தொடர்ந்து தற்போது இந்த பாலிவுட் வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். இந்த சீரிஸ் இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
டெல்லி க்ரைம் சீசன் 3 – Hindi:
டெல்லி காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட உண்மையான வழக்குகளின் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த வெப் சீரிஸை எடுத்து வருகிறார்கள். முதல் சீசனுக்காக சர்வதேச எம்மி விருதையும் இந்த சீரிஸ் வென்றிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்த விருதை வென்ற முதல் இந்திய வெப் சீரிஸ் இதுதான். இதன் மூன்றாம் சீசன் இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
ரானா நாயுடு – Hindi:
`ரே டோனாவன்’ என்ற பிரபல அமெரிக்க வெப் சீரிஸின் இந்தி ரீமேக்தான் இந்த `ரானா நாயுடு’. ரானா, வெங்கடேஷ் என இரண்டு முன்னணி டோலிவுட் கதாநாயகன்கள் நடித்த இந்த இந்தி வெப் சீரிஸின் முதல் சீசன் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இதன் இரண்டாம் சீசன் இந்தாண்டு ஒளிபரப்பாகவிருக்கிறது.
The Ba***ds of Bollywood:
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் இயக்குநராக அறிமுகமாகும் படைப்பு இந்த `The Ba***ds of Bollywood’. இந்த வெப் சீரிஸை ஷாருக் கானின் மனைவி கெளரி கான் தயாரித்திருக்கிறார். பல பாலிவுட் நட்சத்திரங்கள் கேமியோ செய்திருக்கும் இந்த வெப் சீரிஸ் கூடிய விரைவில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
அனுஜா:
ப்ரியங்கா சோப்ரா உட்பட பலர் இணைந்து தயாரித்திருக்கும் `அனுஜா’ என்கிற குறும்படம் இந்தாண்டு ஆஸ்கருக்கான இறுதி ரேஸில் இடம்பிடித்திருக்கிறது. அனுஜா என்கிற 9 வயது சிறுமியின் கதையே பேசும் இந்த சீரிஸ் இன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…