மதுரை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு நெல் கொள்முதல் மையங்களில் ஆளும் கட்சியினரின் அரசியல் தலையீட்டால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கெனவே மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் முல்லை பெரியாறு பாசனம், வைகை ஆற்றுப் பாசனம், திருமங்கலம் கால்வாய் பாசனம், 58 கிராம கால்வாய் பாசனம், கள்ளந்திரி கால்வாய் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம், ஆழ்துளைக் கிணறு பாசனம் மூலம் நெல் விவசாயம் 80 ஆயிரம் ஏக்கரில் நடைபெறுகிறது. இதற்கு அடுத்தபடியாக, வாழை, கரும்பு, தென்னை மற்றும் காய்கறிகள் பயிர் விவசாயம் நடந்து வருகிறது. இதில் தற்போது பருவகால மாற்றம், தரமற்றவிதைகள், அளவுக்கதிகமான உரங்கள் பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மாவட்டம் முழுவதும் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு குறைந்தது 40 மூட்டைகள் விளைச்சல் எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது 2 மூட்டைகள் மட்டுமே அறுவடையாகும் நிலையில் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க அரசு நெல் கொள்முதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மதுரை மாவட்டத்தில் தற்போதுவரை 100 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அங்கு ஆளும் கட்சியினரே அதிகாரம் செலுத்துகின்றனர். இதனால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே, அரசியல் தலையீட்டை தடுத்து விவசாயிகளை கண்காணிப்புக் குழுவில் சேர்த்து, நியாயமான முறையில் செயல் படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்க மதுரை மாவட்டத் தலைவர் பி.மணிகண்டன் கூறியதாவது: பல வகையிலும் பாதித்துள்ள விவசாயிகளுக்கு ஒரே ஆறுதல் அரசு நெல் கொள்முதல் மையங்கள்தான். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள பணியாளர்கள் பற்றாக்குறையால், ஒரு மையத்துக்கு கொள்முதல் அலுவலர், காவலாளி ஆகிய இருவர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு அந்தந்த பகுதி ஆளுங்கட்சி ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் உள்ளவர்கள் அதிக தலையீடு செய்கின்றனர்.
ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.24.50 வீதம் 40 கிலோவுக்கு ரூ.980 தருகின்றனர். அதில் ஒரு மூட்டைக்கு ரூ.50 தனியாக கேட்கின்றனர். மேலும், 40 கிலோ சிப்பத்துக்கு 41 கிலோ நெல் பிடிக்கின்றனர். ஒரு மூட்டைக்கு குறைந்தது ரூ.50 முதல் ரூ.100 வரை லஞ்சமாக கேட்கின்றனர். ஏற்கெனவே விவசாயிகள் விதைகள், உரங்கள் என ஏகப்பட்ட செலவுகளால் நொந்து போயுள்ளனர். தற்போது, அறுவடை நேரத்தில் விளைச்சல் குறைவாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, விவசாயிகளின் கஷ்டங்களில் பங்கெடுக்காத ஆளும் கட்சியினர், நெல் அறுவடை செய்த விவசாயிகளிடம் பணம் அறுவடை செய்கின்றனர். இவர்களது இச்செயல் திமுக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடுகளை தடுக்க வேண்டியவர்களும் கண்டும் காணாமல் உள்ளனர். ஒவ்வொரு மையத்துக்கும் விவசாயிகள் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். மேலும், விவசாயிகளிடம் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகளிடம் கொள்முதல் செய்வதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.