ராமநாதபுரம்: “அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என சிலர் திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரசியல் ஆக்குகின்றனர்” என்று ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் இன்று (பிப்.5) நடைபெற்ற புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் முன்னிலை வகித்தார். பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்து பேசியது: “ஆவின் பால் பொதுமக்களுக்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் தற்போது 7 லட்சம் லிட்டா் பால் அதிகளவு பொதுமக்களுக்கு வழங்கிடும் வகையில் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் வறுமையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் முன்னேற்றத்துக்கு தேவையான திட்டம் ஆவின் நிர்வாகம் மூலம் வழங்கப்படுகிறது. இதே போல் ஏழை மக்கள் அதிகம் பேர் ஆவின் பால் பயனாளர்களாக உள்ளனர்,” என தெரிவித்தார்.
தொடர்ந்து ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராஜலு, ஆவின் பொது மேலாளர் ராஜசேகர், ஆவின் துணைப்பதிவாளர் புஷ்பலதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறும்போது: “தனியார் பால் விலையைவிட ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ.12 குறைத்து விற்பனை செய்கிறோம். ஆவினில் ரூ. 1,800 கோடியில் பல திட்டங்கள் நடைபெற்று வருகிறது. கரூர் காவிரி ஆற்றிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கான சிறப்பு குடிநீர் திட்டம் வரும் மே மாதம் பயன்பாட்டுக்கு வரும்.
தமிழகத்தில் மதச்சார்பற்ற அரசு நடக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் தர்கா 100 ஆண்டுகளாக உள்ளது. அங்கும் மக்கள் செல்கின்றனர். முருகன் கோயிலுக்கும் சென்று மக்கள் எப்போதும் போல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். எந்தப் பிரச்சினையும் இல்லை. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என சிலர் இதை அரசியலாக்குகின்றனர்,” என தெரிவித்தார்.