US issue: நாடு திருப்பிய இந்தியர்கள்; வைரலாகும் விலங்கு மாட்டிய படங்கள்… உண்மை என்ன?

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை இன்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தது டிரம்ப் அரசு.

7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்கஅரசு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முதல் தொகுப்பு நபர்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.

நாடு திரும்பும் இந்தியர்கள் இன்று காலையே பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மதிய வேளையில் சுமார் 2 மணியளவில் சி17 விமானம் தரையிறங்கியுள்ளது.

சான் அன்டோனியோ, டெக்ஸாஸ் மாகணங்களிலிருந்து அமெரிக்க விமானங்கள் புறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட செய்தி வந்தது முதலே கைதிகளைப் போல குடியேறிகள் கைவிலங்கிட்டு, கால்களிலும் விலங்கிடப்பட்டு, முகத்தை மறைக்கும் வகையில் முக கவசம் அணிவிக்கப்பட்டு, கொண்டுவரப்பட்டதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

நெட்டிசன்கள் பலரும் இந்தியர்களை அமெரிக்கா மரியாதையுடன் நடத்தவில்லை என்றும் தீவிரவாதிகளைப் போல நடத்துகின்றனர் என்றும் என அந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். ஆனால் அந்த புகைப்படங்களில் இருப்பவர்கள் இந்தியர்கள் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னணி பத்திரிகையாளர் முகமது ஜுபிர், “இந்தியர்கள் USA -விலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. செய்தி சேனல்களும் சில சமூக வலைத்தள பக்கங்களும் அமெரிக்க குடியேறிகள் கைகளில் விலங்கிட்டு திருப்பி அனுப்பப்பட்டதைக் காட்டுகின்றன. ஆனால் வைரலான அந்த புகைப்படங்கள், குவாத்தமாலா, ஈக்வடார் மற்றும் கொலம்பியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் புகைப்படங்கள். செய்திகள் கூறுவதைப்போல இந்தியர்களுடையவை அல்ல” என தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட சில ஊடகங்களும் அந்த புகைப்படங்களில் இருப்பது இந்தியர்கள் அல்ல என்பதை உறுதி செய்துள்ளன. கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையைப் பயன்படுத்தி புகைப்படங்கள் முதலில் எங்கே வெளியிடப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்!

104 இந்தியர்கள் இன்று நாடுகடத்தப்பட்டதாக ஊடகங்களில் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. இந்தியர்கள் கண்ணியமாக நடத்தப்பட்டார்களா என்பது குறித்தும் இந்திய வெளியுறவுத்துறையும், அமெரிக்க அரசும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.