ஆட்சியரின் ‘144 தடை’ உத்தரவு, காவல் துறையினரின் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டும் திருப்பரங்குன்றம் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது. பக்தர்கள் வருகை, மக்கள் நடமாட்டம் முன்போல் இல்லாததால் திருப்பரங்குன்றம் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா ஆகியற்றை மையமாக கொண்டு இந்து-முஸ்லீம் அமைப்புகளிடையே கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மோதல் போக்கும், போராட்டங்களும் தொடர்ந்தது. ஆட்சியர் 144 தடை உத்தரவால் கடந்த பிப்.3, 4-ம் தேதிகளில் திருப்பரங்குன்றத்தில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆட்சியர் தடையை மீறியும், போலீஸாரின் மூன்றடுக்கு கண்காணிப்பை கடந்தும் நேற்று இந்து அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்தில் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியரின் 144 தடை உத்தரவும், கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்பட்டாலும் இன்னும் திருப்பரங்குன்றம் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. கடைகள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், மண்டபங்கள் திறக்கப்பட்டு கோவில் சாலை வழியாக போக்குவரத்துகள் தொடங்கப்பட்டன. ஆட்டோ, கார், பஸ்கள் முன்போல் இயக்கப்பட்டும் இயல்பு நிலைக்கு திருப்பரங்குன்றத்தை கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முயற்சி எடுத்தாலும், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் முன்பு போல் வரவில்லை.
திருப்பரங்குன்றத்தில் நிலவும் அசாதாரண நிலையால் வெளிமாவட்ட பக்தர்கள் திருப்பரங்குன்றம் வர தயங்குவதாக கூறப்படுகிறது. சாலைகள், கோவில் வீதிகளில் உள்ளூர் மக்கள் நடமாட்டம் மட்டும் ஒரளவு உள்ளது. போலீஸார் கெடுபிடிகள் விலக்கி கொள்ளப்பட்டாலும் திருப்பரங்குன்றம் மலை அடிவாரம், கோவில் முன்பு மற்றும் மலைப்பாதைகளில் போலீஸார் கண்காணிப்பு தொடர்கிறது.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று காலையில் முருகனை தரிசிக்க மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். ஆனால், முன்பு போல் இல்லாமல் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஒருவித அச்ச உணர்வுடனே சாமி தரிசனம் செய்து சென்றனர். மாலையில் மிக குறைவான எண்ணிக்கையிலே மக்கள் வரவில்லை. தற்போது தைப்பூச தெப்பத்திருவிழா நாட்களாக இருந்தும் பக்தர்கள், மக்கள் நடமாட்டம் இல்லாமல் திருப்பரங்குன்றம் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகு முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், கட்சிகளுக்கும், இயக்கம் சார்ந்தவர்களுக்கு போலீஸார் மலை மீது செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை. மலைக்கு பால், குடிநீர், பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்கள் தவிர, மற்ற உணவுப்பொருட்கள் எடுத்து செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்னும் தொடருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மக்கள் திருப்பரங்குன்றம் வர ஆரம்பித்துவிட்டனர். காலை முருகன் கோயில், மலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில், தர்காவுக்கு மக்கள் வழக்கம்போல் வர ஆரம்பித்துவிட்டனர். ஒரிரு நாளில் கடந்த காலங்களை போல் வெளியூர் மக்களும் சகஜகமாக வர ஆரம்பித்துவிடுவார்கள்’’ என்றார்.