பூனம் குப்தா: ஜனாதிபதி மாளிகையில் திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் – எப்படி சாத்தியம்?

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக ஒரு திருமணம் நடைபெற உள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையின் அதிகாரியான பூனம் குப்தா இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்து கொள்ளவுள்ள முதல் நபர் என்ற வரலாற்றை படைக்கவுள்ளார்.

இந்த திருமணம் பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லியின் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அன்னை தெரேசா கிரவுண்ட் வளாகத்தில் நடைபெற உள்ளது.

ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்து கொள்ளும் முதல் நபராக வரலாறு படைத்துள்ளார் பூனம் குப்தா. இவரின் வருங்கால கணவரும் சி.ஆர்.பி.எஃப் அதிகாரி தான். இவர் தற்போது ஜம்மு காஷ்மீரில் பணிபுரிகிறார். தற்போது ஜனாதிபதி மாளிகையில் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள குப்தா, தனது சிறந்த சேவை காரணமாக இந்த மதிப்புமிக்க இடத்தில் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

பூனம் குப்தா தனது சேவை மற்றும் தலைமைத்துவத்திற்காக பாராட்டை பெற்றிருக்கிறார். 74 ஆவது குடியரசு தின அணிவகுப்பின்போது அவர் அனைத்து பெண்களும் அடங்கிய ஒரு படைப்பிரிவை வழிநடத்தி தனது சிறந்த தலைமைத்துவத்தையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜனாதிபதி மாளிகையில் திருமணம் எப்படி?

ஜனாதிபதி மாளிகையில் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பை பூனம் குப்தா எவ்வாறு பெற்றார் என்பது குறித்து பலரின் மனதில் கேள்வி இருக்கும். ஜனாதிபதி திரௌபதி முர்மு, குப்தாவின் சேவையில் அவர் கடுமையான விதிகளை பின்பற்றுதல் காரணமாக அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நடவடிக்கை சி.ஆர்.பி.எஃப் மீதான குப்தாவின் அர்ப்பணிப்பையும் தேசத்திற்கான அவரது சிறந்த சேவையும் அங்கீகரிப்பதாக பார்க்கப்படுகிறது.

யார் இந்த பூனம் குப்தா?

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியைச் சேர்ந்த பூனம் குப்தா, தனது கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் எப்போதும் மிகுந்த அர்ப்பணிப்பைக் காட்டி வருகிறார். கணிதத்தில் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் கல்வியில் இளங்கலை (பி.எட்) பட்டம் பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டில், பூனம் யுபிஎஸ்சி தேர்வில் 81 வது இடத்தைப் பிடித்தார். இது சி.ஆர்.பி.எஃப்-இல் உதவி கமாண்டன்ட் பதவிக்கு வழிவகுத்தது. ராஷ்டிரபதி பவனில் பணிபுரிவதற்கு முன்பு, பூனம் பீகாரின் நக்சல் பாதிப்பு மண்டலங்கள் உட்பட சவாலான மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பணியாற்றிருக்கிறார்.

அவரது கடின உழைப்பும் உறுதியும் இந்தியா முழுவதும் உள்ள பல இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.