சந்திரயான் 4 முதல் சமுத்திரயான் வரை: மத்திய அமைச்சர் தந்த அப்டேட்

புதுடெல்லி: சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பாறைகளின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவந்து ஆய்வுசெய்யும் வகையில், சந்திரயான்-4 வரும் 2027-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “சந்திரயான் 4 திட்டம் குறைந்தது இரண்டு தனித்தனியான ஹெவிலிஃப்ட் எல்விஎம் 6 ராக்கெட்களை ஏவுவதை உள்ளடக்கியது. இவை அந்தப் பயணத்தின்போது ஐந்து வெவ்வேறு கூறுகளை சுமந்து சென்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும். சந்திரயான் 4 திட்டம், சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டுவருவதை நோக்கமாக கொண்டது.

இந்திய விண்வெளி வீரர்களை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் பூமியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக திருப்பி அழைத்து வரும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதேபோல், 2026-ல் மூன்று விஞ்ஞானிகளை நீர்மூழ்கி கப்பலில் கடலில் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அழைத்துச் சென்று ஆராய்ச்சி நடத்தும் சமுத்திரயான் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தச் சாதனை, இந்தியாவின் ககன்யான் போன்ற பிற மைல்கல் சாதனைகளுடன் இணைக்கப்படக் கூடிய சாதனையாகும். இது இந்தியாவின் அறிவியல் சிறப்பை நோக்கிய பயணத்தின் ஒரு தற்செயல் நிகழ்வாகும்.

சமுத்திரயான் திட்டம் குறித்து பிரதமர் மோடி தனது குடியரசு தின உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். சமுத்திரயான் திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முக்கியமான கனிமவளங்கள், அரிதான உலோகங்கள், மற்றும் கண்டுபிடிக்கப்படாத கடல்வாழ் பல்லுயிர்களைக் கண்டறிய உதவும். அதேபோல், வயோம்மித்ரா என்ற ரோபோட்டை ஏற்றிச் செல்லும் மனிதர்கள் இல்லாமல் செல்லும் ககன்யான் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும், அதன் முதல் ராக்கெட் ஏவுதளம், இரண்டு தசாப்தங்கள் கழித்து 1993-ம் ஆண்டே நிர்மானிக்கப்பட்டது. இரண்டாவது ஏவுதளம் 2004-ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்டது. அதற்கும் அடுத்த பத்தாண்டுகள் எடுத்துக்கொண்டது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விண்வெளித் துறை உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு என்ற இரண்டு வகையிலும் முன்னெப்போதுமில்லாத அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது. நாம் இப்போது மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தையும், முதல் முறையாக கனகர ராக்கெட்களையும் உருவாக்கி வருகிறோம். அதேபோல் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கு வெளியே, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய செயற்கைக்கோள் ஏவுதளத்தை உருவாக்க உள்ளோம்.

தற்போது 8 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ள இந்திய விண்வெளி பொருளாதாரம் அடுத்த பத்தாண்டுகளில் 44 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியாவின் பங்கை மேலம் உறுதிப்படுத்தம்.

கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளித் துறையினை தனியாருக்கு திறந்து விட்டது போன்ற சீர்திருத்த நடவடிக்கை புதிய கண்டுபிடிப்புகள், முதலீடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு வழிவகுத்துள்ளன. புதிய உள்கட்டமைப்பு, தனியார்களின் பங்களிப்பு அதிகரிப்பு மற்றும் சாதனை படைக்கும் முதலீடுகளுடன் இந்தியா வரும் ஆண்டுகளில் பெரும் சாதனை படைக்க உள்ளது” என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.