புதுடெல்லி: ‘தேசம் முதலில்’ என்பதே நாட்டின் வளர்ச்சிக்கான எங்கள் மாடல். எங்களின் இந்த வளர்ச்சி மாடலை மக்கள் சோதித்துப் பார்த்து, புரிந்து கொண்டு, ஆதரிக்கத் தொடங்கினார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர், “குடியரசுத் தலைவரின் உரை ஊக்கமளிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. மேலும், நம் அனைவருக்கும் முன்னோக்கிச் செல்லும் பாதையைக் காட்டியது. அனைவரோடும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி (சப்கா சாத் சப்கா விகாஸ்) என்பதை காங்கிரஸால் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது. அது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அது அவர்களின் திட்டத்துக்கும் பொருந்தாது. ஏனெனில், அது ஒரு குடும்பத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்சி.
2014-க்குப் பிறகு, இந்தியா ஒரு மாற்று ஆட்சி மாடலை பெற்றது. மக்களின் ஆசியுடன் நாங்கள் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். இந்தியா இப்போது ஒரு புதிய மாடலை பெற்றுள்ளது. இது, ஒரு சிலரை திருப்திப்படுத்துவது அல்ல. மாறாக, அனைவருக்கும் திருப்தி அளிப்பது. காங்கிரஸ் ஒரு சிறிய குழுவை திருப்திப்படுத்தி மற்றவர்களை பட்டினியால் வாட வைத்தது. தேர்தல்களின் போது மட்டுமே, அவர்கள் திட்டங்களை அறிவிப்பார்கள். பின்னர், மக்களை ஏமாற்றுவார்கள்.
எங்கள் நிர்வாகம் அனைவரோடும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்டது. ‘தேசம் முதலில்’ என்பதே நாட்டின் வளர்ச்சிக்கான எங்கள் மாடல். எங்களின் இந்த வளர்ச்சி மாடலை நாட்டு மக்கள் சோதித்துப் பார்த்து, புரிந்து கொண்டு, ஆதரிக்கத் தொடங்கினார்கள்.
இன்று, சமூகத்தில் சாதி விஷத்தைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல ஆண்டுகளாக, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த ஓபிசி எம்.பி.க்கள் ஓபிசி பிரிவுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கோரி வந்தனர். அவர்களின் கோரிக்கை காங்கிரசால் நிராகரிக்கப்பட்டது. ஆனால், நாங்கள் இந்த பிரிவுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கினோம்.
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மீது காங்கிரஸ் எவ்வளவு கோபத்தையும் வெறுப்பையும் கொண்டிருந்தது என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கரை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக அவர்கள் ஒருபோதும் கருதவில்லை. ஆனால், இன்று கட்டாயத்தின் காரணமாக அவர்கள் ‘ஜெய் பீம்’ என்ற கோஷத்தை எழுப்ப வேண்டியிருக்கிறது.
காங்கிரஸ், தங்களுக்கான வாய்ப்புகளை தடுப்பதில் ஈடுபடுகிறது என்பதை உணர்ந்த அதன் கூட்டாளிகளும் தற்போது அவர்களை கைவிட்டுவிட்டனர். இப்போது அவர்களின் நிலையைப் பாருங்கள்.
யாராலும் நினைவுகூரப்படாதவர்களை மோடி வணங்குகிறார். ஏழை, பின்தங்கிய மக்கள் எங்கள் அரசின் முன்னுரிமைகளில் உள்ளனர். பொம்மை உற்பத்தி, சிறு வணிகர்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திறமையான தொழிலாளர்களை வலுப்படுத்துவதை இந்த பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது. கிசான் அட்டை சலுகைகளை மீனவர்களுக்கும் வழங்கினோம். இதனால், மீன் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி இரு மடங்கு அதிகரித்துள்ளது.
நமது அரசியலமைப்பு சபையிடம் இருந்து உத்வேகத்தை எடுத்துக்கொண்டு, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற நாங்கள் முயல்கிறோம். சிலரது அரசியலுக்கு இது இடையூறாக இருக்கலாம். எனவே, ஏன் பொது சிவில் சட்டம் கொண்டு வருகிறீர்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்தியாவின் முதல் அரசின்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் பத்திரிகை சுதந்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்கு எதிராக மும்பையில் ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. நடிகர் பால்ராஜ் சாஹ்னி, புகழ்பெற்ற கவிஞர்கள் மஜ்னு சுல்தான்புரி, ஹிருதயநாத் மங்கேஷ்கர் ஆகியோர் வேலைநிறுத்தத்தை ஆதரித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது புறக்கணிக்கப்பட்டனர்.
1975 அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது, நடிகர் தேவ் ஆனந்த் அவசர நிலையை ஆதரிக்க மறுத்ததால் தூர்தர்ஷனில் அவரது படங்கள் தடை செய்யப்பட்டன. அவசர நிலையின்போது இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கைவிலங்கிட்டவர்கள் நீங்கள்(காங்கிரஸ்).
சூரியன் உதிக்கும், இருள் நீங்கும், தாமரை மலரும் என்று பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறுவார். வறுமையை ஒழிக்க எங்கள் அரசு செய்த பணிகளைப் போன்ற பணிகள் இதுவரை செய்யப்படவில்லை. ஏழைகள் தங்களை உயர்த்திக் கொள்ள வாய்ப்பளித்தோம். இப்போது 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.
நாங்கள் 4 கோடி வீடுகளைக் கட்டியுள்ளோம், அவற்றில் 1 கோடி வீடுகள் நகரங்களில் உள்ளன. உலகம் நமது சுற்றுலாவைக் கவனித்து வருகிறது. இதனால், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இவை அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும். வளர்ந்த இந்தியா நடுத்தர வர்க்கத்தினராலும் இளைஞர்களாலும் கட்டப்படும். இளைஞர்கள் வளரும்போது, வளர்ந்த நாட்டின் பலன்களைப் பெறும் வகையில் இந்தியா வளர்ச்சியடையும்” என்று பிரதமர் மோடி தெரவித்தார்.