மதுரை: திருப்பரங்குன்றம் அமைதிப் பேச்சுவார்த்தையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாக அதிமுக பற்றி கூறிய பொய்யான தகவலை திரும்ப பெறாவிட்டால் மதுரை ஆட்சியர் சங்கீதா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை தொடர்பாக ஆட்சியர் சங்கீதா நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கையில், திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் (பொ) தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும், அதில் அதிமுக பிரதிநிதி மட்டும் கையொப்பமிட மறுத்து சென்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். ஆட்சியரின் இந்த அறிக்கைக்கு அதிமுக மதுரை மாவட்டச் செயலாளர்களான செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மதுரை மாநகர அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, எம்எல்ஏ-க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து, “திருமங்கலத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிமுக பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காத நிலையில் எப்படி கையெழுத்திட மறுத்ததாக குற்றம்சாட்டாலும், அந்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும்,” என்று ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து அவரிடம் கடும் வாக்குவாதம் செய்து முறையிட்டனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வி.வி.ராஜன் செல்லப்பா கூறும்போது, “திருப்பரங்குன்றம் பிரச்சினையில் ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிக்கையில், திருமங்கலத்தில் கோட்டாட்சியர் முன்னிலையில் ஜன.30-ம் தேதி அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்துக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்களை அவர் அழைக்கவில்லை. ஆனால், அறிக்கையில் மிக அழுத்தமாக, அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிமுக பிரதிநிதி கையெழுத்துப்போட மறுத்துவிட்டு வெளியேறியதாக ஒரு பொய்யான தகவலை கூறியிருக்கிறார்.
ஆளும்கட்சியினர் தூண்டுதலின் காரணமாக அதிமுக மீது வீண்பழி சுமத்தியிருக்கிறார். அதிமுக சாதி, மதம், இனத்துக்கு அப்பாற்ப்பட்ட கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுக மீது குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காக அந்த அறிக்கை ஆட்சியர் வெளியிட்டு இருக்கிறார். அதிமுக நிர்வாகிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படம், வீடியோ இருந்தால் ஆட்சியர் வெளியிடட்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆட்சியர் குழப்பத்தில் இருக்கிறார். தவறான அந்த அறிக்கையை திரும்ப பெறாவிட்டால் நீதிமன்றத்தில் ஆட்சியர் மீது வழக்கு தொடருவோம் என்பதை உறுதியாக சொல்கிறோம்,” என்றார்.
‘ஆட்சியர் பாவம், பலிகடா ஆக்கப்படுகிறார்கள்’ – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறும்போது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையாகதான் அரசின் செயல்பாடு உள்ளது. மதுரையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அண்ணன், தம்பிகளாக பழகி வருகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி., திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றபிறகுதான் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.
மாவட்ட நிர்வாகமும், அரசும் இந்த பிரச்சினையில் போதிய கவனம் செலுத்துவதில்லை. உளவத்துறை மதுரையில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. நடந்த பிறகு அதற்கு மறுப்பு தெரிவிக்கலாம், காரணங்கள் கூறலாம் என்றுதான் பார்க்கிறார்கள். துணிவாக நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். ஆட்சியர் பாவம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மதுரை ஆட்சியரை பலிகடா ஆக்குகிறது,” என்றார்.