மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற நிபந்தனையை மீறிப் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பிப்.4-ம் தேதி இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது. இதில், வெறுப்புணர்வு, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசக் கூடாது, முழக்கங்கள் எழுப்பக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார். அவரது பேச்சு, மத மோதலுக்கு தூண்டுதலாக இருந்தது, நீதிமன்ற நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காவல் ஆணையரிடம் புகார்: இதனிடையே, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் ஆணையர் லோகநாதனிடம் வழக்கறிஞர்கள் சிலர் புகார் அளித்தனர். அந்த மனுவில், “கடந்த 4-ம் தேதி மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தபோது, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், இந்து அமைப்பினர் காவல் துறையை ஏமாற்றி பக்தர்கள் போர்வையில் பாஜக கொடியுடன் திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் ‘பாரத் மாதாகி ஜே’ போன்று முழக்கமிட்டு முருக கடவுளை இழிவுப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடந்த இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசும்போது, ‘துணை முதல்வர் உதயநிதி கிறிஸ்துவர், திமுக அரசு இந்து விரோத தலிபான் அரசு, திருப்பரங்குன்றம் போராட்டம் தொடரும். 75 முறை போராடி ராமஜென்ம பூமியை மீட்டது போன்று போராடுவார்கள். ராமர் கோயிலை போன்று தர்காவை மாற்றிவிடுங்கள்’ என பேசியுள்ளார்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகி ராம.சீனிவாசன் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகளும் பொய்யான தகவல்களை குறிப்பிட்டுள்ளனர். தமிழகம் மற்றும் மதுரை மாவட்டத்தில் இவர்களின் பேச்சு பொது அமைதி, வளர்ச்சியை சீர்குலைத்து, அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஹெச்.ராஜா, ராம. சீனிவாசன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.