காலே,
இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதே காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா மற்றும் கர்ணாரத்னே களமிறங்கினர். இதில் நிசங்கா 11 ரன்களிலும், தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய கருணாரத்னே 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் சண்டிமால் மற்றும் குசல் மென்டிஸ் பொறுப்புடன் விளையாட அணி 200 ரன்களை கடந்தது. இருப்பினும் மற்ற முன்னணி வீரர்களான மேத்யூஸ் (1 ரன்), கமிந்து மென்டிஸ் (13 ரன்கள்), டி சில்வா (0) ஏமாற்றம் அளித்தனர்.
முதல் நாள் முடிவில் இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் அடித்துள்ளது. குசல் மென்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமரா ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். சண்டிமால் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளும், மேத்யூ குனேமேன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.