புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கிடப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் இந்தியாவுக்கு 104 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். அமெரிக்க ராணுவ விமானத்தில் அழைத்து வரப்பட்ட அவர்களது கை, கால்களில் விலங்கிடப்பட்டு இருந்தது.
இதை கண்டித்து, மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘இது வெளியுறவு கொள்கை சார்ந்த விவகாரம் என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார். இதை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில்
ஈடுபட்டனர். இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. பிறகு, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்: பயணிகளை விமானத்தில் கவுரவமாக அனுப்பியிருக்க வேண்டும். கை, கால்களில் விலங்கிட்டு ராணுவ விமானத்தில் அனுப்பிய விதம் வருத்தம் அளிக்கிறது.
பிரியங்கா காந்தி: ட்ரம்ப் எனது நண்பர் என்கிறார் பிரதமர் மோடி. அப்படியிருக்க, இந்தியர்களை அவமரியாதையாக நடத்த அனுமதிக்கலாமா. இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.