பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிபிஎஸ்இ, ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ, எஸ்எஸ்எல்சி, 12-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் இன்று (பிப்.7) தொடங்கி ஏப்.15-ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே, அனைத்து தேர்வு மையங்களிலும் நாள்தோறும் காலை 7 முதல் மாலை 5.30 வரை தடையற்ற வகையில் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மையத்துக்கு மின் விநியோகம் செய்யும் மின் மாற்றியை கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு 5 மையங்களுக்கும் அவசர காலங்களில் உதவும் வகையில் களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து செயற்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தலைமையாசிரியர்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்ளும் வகையில் துறை சார்ந்த பணியாளர், அதிகாரிகளின் எண்களை அவர்களிடம் வழங்க வேண்டும். தேர்வு நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை மேற்கொள்ளக் கூடாது. மாணவர்கள் படிப்பதற்கு தடையில்லாத வகையில் இரவு நேரங்களிலும் மின்தடை செய்யக் கூடாது. இவ்வாறான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவது தொடர்பாக நாள்தோறும் மண்டல தலைமைப் பொறியாளர்கள் தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.