சியோல்: பாதுகாப்பு மற்றும் டேட்டா பிரைவசி விவகாரத்தால் சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பாட்டுக்கு பயன்பாடு சார்ந்த கட்டுப்பாடுகளை தென் கொரியா விதித்துள்ளது. இந்த உத்தரவை அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இன்னும் பிற அமைச்சகங்கள் அறிவித்துள்ளன.
அந்த நாட்டின் ராணுவ பிரிவு கணினிகளில் டீப்சீக் ஏஐ பாட் பயன்படுத்தக் கூடாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல். இதே போல பயனர்களின் டேட்டா பிரைவசி காரணமாக வெளியுறவு துறை மற்றும் தொழில்துறை அமைச்சகம் டீப்சீக் பயன்பாட்டை முடங்கியுள்ளது. டீப்சீட் ஏஐ பாட்டுக்கு அந்த நாட்டின் நிதித்துறை அமைச்சகம் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.
முன்னதாக, இதே மாதிரியான நகர்வை இத்தாலி எடுத்திருந்தது. டீப்சீக் பயன்படுத்தும் பயனர்களிடம் இருந்து என்ன மாதிரியான தரவுகள் சேகரிக்கப்படுகிறது, அது எங்கு சேமிக்கப்படுகிறது மற்றும் அது குறித்த அறிவிப்பு பயனர்களுக்கு எப்படி தெரிவிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் டீப்சீக் சாட்பாட் வடிவமைப்பாளர்களிடம் இத்தாலி கேட்டிருந்தது. அது தொடர்பாக கிடைத்த பதில், தரவு பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அமைய அந்த சாட்பாட் பயன்பாடு அங்கு முடக்கப்பட்டது.
நேற்றைய தினம் டீப்சீக், சாட்ஜிபிடி மாதிரியான ஏஐ பாட்கலை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலங்களில் பயன்படுத்த வேண்டாம் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
டீப்சீக் சாட்பாட்? – கதை, கட்டுரை, கவிதை, கணக்கு உள்ளிட்டவற்றை விரைந்து நொடி பொழுதில் தரும் திறன் கொண்டுள்ளது சீனாவின் டீப்சீக் ஏஐ. இப்போதைக்கு இதில் டெக்ஸ்ட் வடிவில் மட்டுமே பயனர்கள் உரையாட முடிகிறது. டீப்சீக்-வி3 வெர்ஷனை வெறும் 5.58 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் அதிக செயல்திறன் கொண்ட பாட் என இது அறியப்படுகிறது.
ஏஐ உலகில் முன்னோடியாக உள்ள சாட்ஜிபிடி-யை அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது டீப்சீக். பல கோடி முதலீட்டில் கூகுள், மெட்டா, எக்ஸ் மாதிரியான டெக் நிறுவனங்களும், சாட்ஜிபிடி-யின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஏஐ முயற்சியினை வெறும் சில ஆண்டுகளில் தகர்த்துள்ளது டீப்சீக்.
இருப்பினும் டீப்சீக் வசம் பயனர்கள் வினவும் கேள்விகளுக்கு அது கொடுக்கும் பதில் முரணாக இருப்பதாக சமூக வலைதள பதிவுகளில் பயனர்கள் தெரிவித்தனர்.