அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
இதுதொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அதோடு மைக்கேல் பாங்க் வெளியிட்ட பதிவில், “சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பி உள்ளோம். இது மிக நீண்ட தொலைவு பயணம். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால், நிச்சயமாக விரட்டியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா திரும்பிய பஞ்சாபை சேர்ந்த ஜஸ்பால் சிங் கூறும்போது, “வேலைவாய்ப்புக்காக ஒரு ஏஜெண்டிடம் ரூ.42 லட்சம் அளித்து அமெரிக்கா சென்றேன். கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தேன். தற்போது கை, கால்களில் விலங்கிடப்பட்டு கைதி போல இந்தியாவுக்கு திரும்பி உள்ளேன்” என்று தெரிவித்தார்.
பெயர் வெளியிட விரும்பாத நாடு திரும்பிய இந்தியர்கள் கூறும்போது, “சுமார் 40 மணி நேர விமான பயணத்தில் போதிய உணவு வழங்கப்படவில்லை. கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. அமெரிக்க அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயல்படவில்லை” என்று குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டது ஏன்? இந்தியர்களை தீவிரவாதிகளை போன்று நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் விரிவான விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்ப அழைத்துக் கொள்வது அந்தந்த நாடுகளின் கடமை. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது புதிது கிடையாது. இது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கை, கால்களில் விலங்கிடுவது அந்த நாட்டின் சட்டம். எனினும் இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது அவர்களை கண்ணியமாக நடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் ஆண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
வழக்கமாக விமான போக்குவரத்தின்போது பரிமாறப்படும் உணவு வகைகள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. கழிப்பறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு இந்தியரிடமும் தனியாக விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அமெரிக்காவுக்கு சென்றார்கள், அவர்களை அனுப்பிய ஏஜெண்ட் யார் என்பது குறித்து கேட்டறியப்படுகிறது. அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் ஏஜெண்டுகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுடன் தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை எழுந்தால் விமானத்தில் உடனடியாக இந்தியா அழைத்து வரப்படுவார்கள். உக்ரைன் போரின்போது அங்கு கல்வி பயின்ற இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்தோம். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்கிறது” என்று அமைச்சர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு: இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக இருவரும் விரிவான ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க அரசுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் நலன்களை பாதுகாக்க புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் பிடிபட்டால் அவர்களை பாதுகாப்பாக, கவுரவமாக இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக புதிய சட்டத்தில் பல்வேறு விதிகள் வரையறுக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக சசி தரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசிடம் ஏற்கெனவே விரிவான அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. இதன் அடிப்படையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.