'பனாமா கால்வாய்க்கு குறிவைக்கும் ட்ரம்ப்' – சர்வதேச அரசியலில் என்ன நடக்கிறது?

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக சமீபத்தில், “பனாமா கால்வாய் வழியாகச் பயணிக்கும் அமெரிக்க சரக்கு கப்பல்களுக்கு அந்தநாடு அதிக கட்டணங்களை வசூலித்து வருகிறது. இது முற்றிலும் தன்னிச்சையாகவும், நியாயமற்ற முறையிலும் எடுக்கப்பட்ட முடிவு. தற்போது அதை உடனடியாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது அதன் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார், ட்ரம்ப்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முனிலோ, “பனாமா கால்வாயின் ஒவ்வொரு சதுர மீட்டரும் எங்களுடையது. அதைச் சுற்றியுள்ள பகுதியும் எங்களுடையது. எனவே நாங்கள் பனாமாவின் இறையாண்மை, சுதந்திரத்தில் எந்த சமரசத்தையும் செய்துகொள்ள மாட்டோம்” என்றார்.

பனாமா கால்வாய்

ஆனாலும் ட்ரம்ப் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. “பனாமா கால்வாய் அமெரிக்காவின் கீழ் வர வேண்டும். இல்லையென்றால் சக்தி வாய்ந்த சம்பவம் ஒன்று நிகழ்த்தப்படும். இதை உருவாக்கியது அமெரிக்காதான். ஆனால் தற்போது பனாமா கால்வாயை சீனா நடத்துகிறது. சீனாவுக்கு நாங்கள் வழங்கவில்லை. ஒப்பந்தத்தை மீறி நடந்துகொள்கிறார்கள். எனவே நாங்கள் அதை திரும்பப் பெறப் போகிறோம்” என்றார்.

இந்தசூழலில் கடந்த வாரம் பனாமா நாட்டுக்குச் சென்றார், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ. அப்போது அவர், “அமெரிக்க கப்பல்களுக்கான கட்டணங்களை குறைக்க வேண்டும்” என வலியுறுத்தினார். ஆனால் இதுகுறித்து எந்த தகவலையும் பனாமா அரசு தெரிவிக்கவில்லை. இந்தசூழலில் அமெரிக்க அரசு வெளியிட்ட அறிவிப்பில், “பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க போர் கப்பல், அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு பல மில்லியன் டாலர்கள் மிச்சமாகும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பனாமா அரசு பணித்துவிட்டது என பேசப்பட்டது.

வெள்ளை மாளிகை | ட்ரம்ப்

இதற்கிடையில் பனாமா கால்வாய் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. பனாமா கால்வாயின் சுங்க கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களை நிர்ணயம் செய்யும் அதிகாரம் பனாமா கால்வாய் ஆணையத்திடம் மட்டுமே இருக்கிறது. நாங்கள் அமெரிக்க கப்பலுக்கான கட்டண விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும் இதுகுறித்து அந்த நாட்டின் அரசு அதிகாரிகளுடன் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜி ஜின்பிங்

இதன் பின்னணி குறித்து பேசும் சர்வதேச அரசியல் நோக்கர்கள், “அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் பனாமா கால்வாய். இது 82 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த திட்டம் 1881-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால் தொடங்கப்பட்டது. நிதி பிரச்னை, தொழிலார்களுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறையவால் அவர்கள் உயிரிழந்தது போன்ற காரங்களினால் திட்டம் கைவிடப்பட்டது. பிறகு அமெரிக்கா சம்மந்தப்பட்ட திட்டத்தை செயல்படுத்தியது. இது இல்லையென்றால் 11,000 கிலோ மீட்டர்களுக்கு மேல் கப்பல்கள் பயணிக்க வேண்டும். ஆனால் இந்தக் கால்வாய் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கு குறிப்பிடத்தக்க நேரத்தையும், எரிபொருள் செலவையும் குறைக்கிறது. இதனை ஆண்டுதோறும் சுமார் 14,000 கப்பல்கள் பயன்படுத்துகின்றன. அதில் அமெரிக்க கப்பல்கள்தான் அதிகம். ஆண்டுதோறும் சுமார் 270 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் இவ்வழியாக நடக்கிறது.

அட்லாண்டிக் பெருங்கடல்

ஆரம்பத்தில் இதனை அமெரிக்காதான் நிர்வகித்து வந்தது. இதற்கு பனாமா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனது உரிமையை அமெரிக்கா ரத்து செய்தது. இந்த சூழலில்தான் மீண்டும் பனாமா கால்வாய் சர்ச்சையை ட்ரம்ப் தொடங்கியிருக்கிறார். இதற்கு சீனாவுடன் அதீத நட்பை பனாமா கொண்டிருப்பதுதான் காரணம்.

அதாவது சர்வதேச நாடுகளை இணைக்கும் பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் என்ற சீனாவின் பெருவழிப் பாதை திட்டத்தில் பனாமாவும் இணைந்திருக்கிறது. மேலும் பனாமாவில் பெருமளவில் முதலீடுகளையும் சீனா செய்திருக்கிறது. கூடவே அந்த நாட்டில் இருக்கும் இரண்டு துறைமுகங்கள் ஹாங்காங் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவேதான், ‘பனாமா கால்வாயை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக’ ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், ‘சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை’ என பனாமா சொல்கிறது. ஆனாலும் தனது முடிவிலிருந்து ட்ரம்ப் பின்வாங்குவதாக இல்லை. வரும் காலத்தில் இது பெரும் பிரச்னையாக வெடிக்கும்” என்றனர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.