புதுடெல்லி: வரும் 10ம் தேதி பிரான்ஸ் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 11-ம் தேதி அந்நாட்டில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டுக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து தலைமை தாங்குகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக வரும் 10ம் தேதி பிரான்ஸ் செல்ல உள்ள நிலையில், அவரது பயண திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 10ம் தேதி பிரான்ஸ் செல்லும் பிரதமர், அன்றைய தினம் விவிஐபி உச்சிமாநாடு இரவு விருந்தில் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 11ம் தேதி காலை செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டுக்கு (Artificial Intelligence Action Summit) திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு அதிபர் மக்ரனும் பிரதமர் மோடியும் தலைமை தாங்குகின்றனர்.
பிப்.11ம் தேதி பிற்பகலில் மோடி – மேக்ரான் தலைமையில், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான வட்டமேசை கூட்டம் நடைபெறும். இதனையடுத்து, பிரான்சின் தெற்கே மார்சேய்க்குச் செல்லும் பிரதமர், அங்கு இந்தியாவின் துணை தூதரகத்தைத் திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பிப். 12ம் தேதியும் பிரதமர் மோடி, பிரான்சில் இருக்கிறார். அதன் பிறகே அவர் அதிகாரபூர்வ பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, பாதுகாப்பு, விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகியவை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவும் பிரான்சும் செயற்கை நுண்ணறிவில் பிரான்ஸ்-இந்தியா எதிர்கால திட்டத்தை வெளியிடுவார்கள்.
முன்னதாக, மேக்ரான் ஒரு அறிவிப்பில், “பிப்ரவரி 11-12 தேதிகளில் பிரான்ஸ் AI உச்சிமாநாட்டை நடத்துகிறது. இந்த உச்சி மாநாடு செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச விவாதத்தை நடத்த உதவும். பிரதமர் மோடி நமது நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட உடனேயே அங்கு வருவார். மேலும் இது AI தொடர்பான அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற முக்கிய நாடுகளுடனும், வளைகுடா நாடுகளுடனும் உரையாடலை மேற்கொள்ள உதவும்” என்று கூறினார்.
பிரதமர் மோடிக்கும் பிரெஞ்சு அதிபர் மேக்ரானுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) முக்கிய கவனம் செலுத்தும் என்று ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா – பிரான்ஸ் இடையே மக்கள் தொடர்பை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும், 2030ம் ஆண்டுக்குள் பிரான்சில் 30,000 இந்திய மாணவர்கள் படிப்பார்கள் என்றும் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது பிரான்சில் 10,000 இந்திய மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.