சென்னை: “திருப்பரங்குன்றம் மலையில் உயிர் பலியிடுவது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளபோது வழக்கை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார். எனவே, மாவட்ட ஆட்சியர் பிப்.5-ம் தேதி அன்று ஒருதலைப் பட்சமாக மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் விதத்திலும் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 5.2.2025 தேதியிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர், உண்மைகளை மறைத்து ஒரு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை மட்டும் குறிப்பிட்டு ஒருதலைப்பட்சமாக பத்திரிகை செய்தி வெளியிட்டிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியதாகும். கந்தூரி கொடுப்பது சம்பந்தமாக திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரால் கடந்த 31.12.2024 அன்று நடந்த கூட்டத்தில், இதற்கு முன்பு கந்தூரி நடைபெற்றதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை என்ற காரணத்தால் புதிதாக மலைமேல் கந்தூரி கொடுக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றத்தின் மூலம் உரிய பரிகாரம் தேடிக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
மேலும் திருப்பரங்குன்றம் மலையில் உயிர்ப்பலி செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் மீண்டும் 30.01.2025 அன்று ஏதோ சில அரசியல் கட்சிகளை வைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிவித்திருப்பது நீதிமன்ற நடவடிக்கையை உதாசீனப்படுத்துவதாக உள்ளது.
குறிப்பாக, அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு சாதகமான அரசியல் கட்சிகளை மட்டும் அழைத்துள்ளார். பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பலரை அழைக்கவில்லை. அதிலும் அதிமுகவினர் கூறும்போது “எங்களை அழைக்கவேயில்லை, நாங்கள் கலந்துகொள்ளாத போது எப்படி கையெழுத்திட மறுத்ததாக அதில் குறிப்பிடலாம்” என்று அந்தக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் நகர் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கிராம சபை சார்பாக திருப்பரங்குன்றம் மலை மீது இதுவரை எவ்வித உயிர் பலி கொடுக்கும் வழக்கமும் நடைமுறையில் இல்லை என்றும் தற்பொழுது புதிதாக SDPI (தடை செய்யப்பட்ட PFI அமைப்பின் அரசியல் கட்சி) என்ற கட்சியைச் சார்ந்தவர்களும் வெளியூரைச் சேர்ந்தவர்களும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள் என்றும், அதை தடுத்து நிறுத்தும்படியும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 14.01.2025 ஆம் தேதி மனு அளித்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் முக்கிய பிரமுகர்களும், வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்ட சமூக சேவகர்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த போதும் அவைகளை மறைத்து 05.02.2025 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை மாவட்ட ஆட்சியர் என்கிற மாண்பை குறைக்கும் வகையில் உள்ளது.
மாவட்ட ஆட்சியரின் இத்தகைய செயல்கள் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதால் இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ஒரு சார்பாக செயல்படுவது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான ஒழுக்க விதிகளை மீறுவதாக உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் 05.02.2025 அன்று ஒருதலைப்பட்சமாக மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் விதத்திலும் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் , இந்த விசயத்தில் மாவட்ட ஆட்சியர் நேர்மையாக செயல்படும்படியும் வலியுறுத்துகிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.