IPL 2025, Royal Challengers Bangalore: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மே மாதம் கடைசி வாரம் வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது.
10 அணிகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் 10 அணிகளும் பல்வேறு புதிய வீரர்களை எடுத்துள்ளனர். முந்தைய வீரர்களை தக்கவைத்துள்ளனர். பல அணிகளில் கேப்டன்கள் மாறிவிட்டனர். அதிலும் கடந்த முறை கோப்பையை வென்ற கேகேஆர் அணியே தனது கேப்டனை மாற்றியிருக்கிறது.
IPL 2025: பக்குவமான வீரர்கள் அடங்கிய ஆர்சிபி
மேலும், இந்த 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த அணிகள் மட்டுமின்றி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இம்முறை பெரும் பலத்துடன் காணப்படுகிறது. எப்போதும் நட்சத்திர வீரர்களை அள்ளிப்போடும் ஆர்சிபி அணி, இந்த முறை பார்த்து பக்குவமாக தனது அணியை கட்டுமைத்துள்ளது எனலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி, ரஜத் பட்டிதார், யாஷ் தயாள் ஆகியோரை மட்டுமே மெகா ஏலத்திற்கு முன் தக்கவைத்தது. ஸ்வப்னில் சிங்கிற்கு மட்டும் RTM கார்டை பயன்படுத்தியது. மீதம் உள்ள அனைத்து வீரர்களும் புதிய வீரர்கள்தான். புவனேஷ்வர் குமார், ஜித்தேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்மா, ரஷிக் தர் என தரமான இந்திய வீரர்களுடனும், பில் சால்ட், லியம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தல், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பேர்ட், ஜோஷ் ஹேசில்வுட், நுவான் தூஷாரா என மிரட்டலான வெளிநாட்டு வீரர்களையும் ஆர்சிபி இம்முறை வைத்திருக்கிறது.
IPL 2025: முற்றிலும் மாறியிருக்கும் ஆர்சிபி
இருப்பினும், இந்திய பிரீமியம் சுழற்பந்துவீச்சாளர் இல்லாதது அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கேப்டனாக இருந்த பாப் டூ பிளேசிஸை அந்த அணி தக்கவைக்கவும், ஏலத்திலும் எடுக்கவில்லை. சிராஜ், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத் போன்றவர்களையும் கழட்டிவிட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
IPL 2025: விலகும் முக்கிய வீரர்?
இப்படி அனைத்தும் அம்சங்ளும் கனக்கச்சிதமாக ஆர்சிபி அணிக்கு கைக்கூடி வந்துள்ளது. எனவே ஆர்சிபி அணி இந்த முறை களத்திலும் சிறப்பாக விளையாடி கோப்பையை தட்டித்தூக்கும் என அந்த அணியின் ரசிகர்கள் கனவு கண்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு பேரிடியை தரும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியால் ரூ.12.5 கோடிக்கு எடுக்கப்பட்ட முக்கிய வீரர், காயம் காரணமாக தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
IPL 2025: ஜோஷ் ஹேசில்வுட் காயம்
அதாவது, ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசிவுட் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. இடுப்பில் காயம் காரணமாக அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இன்னும் அவர் உடற்தகுதி பெற சிறிது காலம் எடுக்கும் என ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அந்தச் சூழலில், அவர் ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்தான் விளையாடுவார் என கூறப்படுகிறது.
IPL 2025: ஆர்சிபிக்கு அடுத்த ஆப்பு
காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் வாய்ப்புள்ளது. அப்படி ஆர்சிபி விலகினால் அவர்களது பந்துவீச்சு படை கடந்தாண்டை போல பலவீனமடையும். ஹேசில்வுட்டுக்கு மாற்று வீரரை கண்டடைவது அவ்வளவு எளிதல்ல. நுவான் துஷாரா மட்டுமே தற்போது அணிக்குள் இருக்கிறார். அவருக்கும் பெரியளவில் அனுபவம் இல்லை. அப்படியிருக்க ஹேசில்வுட் ஒருவேளை விலகிவிட்டால் ஆர்சிபி யாரை கொண்டு அந்த இடத்தை நிரப்பும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.