Kavya Maran, Sunrisers Hyderabad | ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் இப்போது இங்கிலாந்தில் நடக்கும் தி ஹண்ரேட் கிரிக்கெட் லீக்கிலும் கால்பதித்துள்ளார். அந்த லீக்கில் உள்ள நார்தர்ன் சூப்பர் சார்ஜஸ் அணியை ஆயிரம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்கியுள்ளார் காவ்யா மாறன். இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் லீக்கில் கால் பதிக்கும் மூன்றாவது ஐபிஎல் அணி என்ற சிறப்பை பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் அணி. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அந்த தொடரில் தலா ஒரு அணியை வைத்துள்ளனர். இப்போது சன்ரைசர்ஸ் அணியும் இணைந்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அவற்றுக்கெல்லாம் மகுடமாக ஐபிஎல் தொடரே இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஸ் கிரிக்கெட் லீக் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் இடம்பிடித்துள்ளன. இதுதவிர பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கரீபீயன் டி20 லீக் போட்டிகளும் பிரபலமாக இருக்கின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பிஎஸ்எல் கிரிக்கெட் லீக் போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரில் உள்ள அணி உரிமையாளர்கள் ஏதாவதொரு அணியை வைத்துள்ளனர். அதனாலேயே இந்த கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
சரி, விஷயத்துக்கு வருவோம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை ஏற்கனவே தென்னாப்பிரிக்க கிரிக்கெட் லீக் போட்டிகளில் ஒரு அணியை வைத்திருக்கிறது. இப்போது இங்கிலாந்து கிரிக்கெட் லீக்கிலும் கால் பதித்திருக்கிறது. காவ்யா மாறன் தலைமையில் செயல்படும் சன்ரைசர்ஸ் அணி மெல்லமாக உலகம் முழுவதும் நடக்கும் கிரிகெட் போட்டிகளில் கால் பதிக்க மற்ற ஐபிஎல் அணிகளைப் போலவே முயற்சி செய்வது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும், வருவாய் நோக்கிலும் கருத்தில் கொண்டே சன் குரூப் இங்கிலாந்து கிரிக்கெட் லீக்கில் ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்திருகிறது.
சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் ஒரே ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையிலான அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அதன்பிறகு அந்த அணி இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. இந்த முறை எப்படியாவது சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பல ஸ்டார் பிளேயர்களை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எடுத்திருக்கிறது. அந்த அணியின் எதிர்பார்ப்பு சாத்தியமாகுமா என்பது மே மாதம் இறுதி வாரத்தில் தெரியும்.