‘கைவிலங்கு’ விவகாரம்: அமெரிக்காவிடம் கவலை தெரிவித்த இந்தியா!

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், மோசமாக நடத்தப்பட்டது குறித்து இந்தியா தனது கவலையை அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் பிப்ரவரி 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி அங்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலம் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், அமெரிக்காவுக்குச் செல்லும் முதல் சில உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர்.

புதிய நிர்வாகம் பதவியேற்ற மூன்று வாரங்களுக்குள் பிரதமர், அமெரிக்காவுக்கு வருகை தர அழைக்கப்பட்டிருப்பது, இந்திய – அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. புதிய நிர்வாகத்துடன் பரஸ்பர ஆர்வமுள்ள அனைத்துத் துறைகளிலும் ஈடுபடுவதற்கு இந்தப் பயணம் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக இருக்கும். இந்தப் பயணத்தின்போது அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த பிரமுகர்களும் பிரதமர் மோடியைச் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் வணிகத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் அவர் பெறுவார்.

அதிபர் ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை பிரதமர் மோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். இந்த முறை, அவரது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பிரதமர் மோடி அவரை அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் உலகத் தலைவர்களில் ஒருவர். பதவியேற்புக்குப் பிறகு பிரதமர் மீண்டும் அவரை அழைத்தார். அந்த சந்தர்ப்பத்தில்தான் அவர்கள் மிக விரைவில் சந்திக்க ஒப்புக்கொண்டனர்” என்று தெரிவித்தார்.

அப்போது, அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விக்ரம் மிஸ்ரி, “நாடு கடத்தல் பிரச்சினையில் இந்தியா தனது கவலைகளை அமெரிக்காவிடம் பதிவு செய்துள்ளது. இதில், உண்மையான பிரச்சினை என்பது சட்டவிரோதக் குடியேற்றத்தை மேற்கொள்ள அப்பாவிகளைத் தவறாக வழிநடத்துவதுதான். இதைச் செய்பவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும். நாடு கடத்தப்படுபவர்களை அழைத்துக் கொண்டு மேலும் பல அமெரிக்க விமானங்கள் வரக்கூடும். 487 இந்திய குடிமக்கள் இப்போது நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

பின்னணி என்ன? – அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அதோடு மைக்கேல் பாங்க் வெளியிட்ட பதிவில், “சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பி உள்ளோம். இது மிக நீண்ட தொலைவு பயணம். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால், நிச்சயமாக விரட்டியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியா திரும்பிய பஞ்சாபை சேர்ந்த ஜஸ்பால் சிங் கூறும்போது, “வேலைவாய்ப்புக்காக ஒரு ஏஜெண்டிடம் ரூ.42 லட்சம் அளித்து அமெரிக்கா சென்றேன். கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தேன். தற்போது கை, கால்களில் விலங்கிடப்பட்டு கைதி போல இந்தியாவுக்கு திரும்பி உள்ளேன்” என்று தெரிவித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத நாடு திரும்பிய இந்தியர்கள் கூறும்போது, “சுமார் 40 மணி நேர விமான பயணத்தில் போதிய உணவு வழங்கப்படவில்லை. கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. அமெரிக்க அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயல்படவில்லை” என்று குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டது ஏன்? இந்தியர்களை தீவிரவாதிகளை போன்று நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் விரிவான விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்ப அழைத்துக் கொள்வது அந்தந்த நாடுகளின் கடமை. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது புதிது கிடையாது. இது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கை, கால்களில் விலங்கிடுவது அந்த நாட்டின் சட்டம். எனினும் இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது அவர்களை கண்ணியமாக நடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் ஆண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை” என்றார்.

அதேவேளையில், இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக இருவரும் விரிவான ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின இதுதொடர்பாக அமெரிக்க அரசுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.