ஒன் பை டூ

செ.கிருஷ்ணமுரளி

சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

“உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்… அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பட்டியலின மக்களுக்குப் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும், அரசியல் செய்ய வேண்டும் என்று எடுத்ததற்கெல்லாம் கண்டன அறிக்கை, போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்வதை வழக்கமாகவே வைத்திருந்தார் திருமாவளவன். இப்போது ஸ்டாலின் தலைமையிலான இந்தப் போலி திராவிட மாடல் அரசில், என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார் திருமா. இந்த நிலையில், ‘வேங்கைவயல் விவகாரத்தில் அ.தி.மு.க எதுவுமே செய்யவில்லை’ என்று பொய் பேசும் திருமா, முதலில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சுயபரிசோதனை செய்ய வேண்டும். சாம்சங் போராட்டம், செய்யாறு சிப்காட், பரந்தூர் விமான நிலைய விவகாரங்களிலும் தி.மு.க அரசின் மோசமான போக்கைக் கண்டித்துப் பேசக்கூட திருமாவுக்குத் துணிவில்லை. மாறாக, தி.மு.க அரசின் போலிச் சாதனைகளை விளம்பரம் செய்வதில் தி.மு.க-வினரை மிஞ்சும் அளவுக்கு வி.சி.க-வினரின் செயல்பாடுகள் இருக்கின்றன. திருமா நடந்துகொள்வதையெல்லாம் பார்த்தால், சீட்டுக்காக மொத்தக் கட்சியையும் தி.மு.க-விடம் அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!”

வன்னி அரசு

துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க

“உளறிக்கொட்டுகிறார் ஜெயக்குமார். கடந்தகாலத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள, பா.ஜ.க-வுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் அ.தி.மு.க-வினர். அவர்களுக்கு எங்கள் தலைவரை விமர்சிக்கத் துளியளவும் அருகதை கிடையாது. மத்திய பா.ஜ.க அரசு, 370-வது பிரிவை நீக்கும்போதும்கூட ‘காஷ்மீர் நல்ல காஷ்மீர்…’ என்று கூட்டணியில் இருந்துகொண்டு பாட்டுப் பாடினார்கள். ‘அமித் ஷாவுக்காக ஆதரவு தருகிறோம்’ என்று பா.ஜ.க-வின் தொங்கு சதையாகவே மாறிப்போனார்கள். பா.ஜ.க கூட்டணியைவிட்டு விலகி வந்த பிறகும்கூட, ஒன்றிய பா.ஜ.க அரசின் மீது விமர்சனங்களைவைக்க அஞ்சுகிறார் பழனிசாமி. ‘கண்டனம்’ என்ற ஒரு வார்த்தைகூட இல்லாமல், கண்டன அறிக்கை எழுதுகிற ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே. ஆனால், வேங்கைவயல், நாங்குநேரிச் சம்பவங்களுக்கு எதிராக முதல் கண்டனத்தைப் பதிவுசெய்தது எங்கள் தலைவர்தான். கூட்டணிக்காகக் குழைந்து கும்பிடுபோட நாங்கள் ஒன்றும் முதுகெலும்பில்லாத அ.தி.மு.க-வினர் கிடையாது. கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் விடுதலைச் சிறுத்தைகள். எனவே, வி.சி.க குறித்துப் பொய் பேசுவதை விட்டுவிட்டு அழிந்துகொண்டிருக்கும் அ.தி.மு.க-வைக் காப்பாற்றப் பாருங்கள்!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.