பேரிடர், வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தராமல், தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தவறான தகவல்களைக் கூறி மக்களை குழப்புகிறார் என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறி்த்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று அறிவித்ததை சுட்டிக்காட்டி தொடர்பற்ற கேள்வியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பியுள்ளார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன் மற்றும் நகைக் கடன்களை தள்ளுபடி செய்து அவற்றுக்கு போதிய நிதியை முழுமையாக ஒதுக்கி செய்து கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்தார். இந்த விவரம்கூட தெரியாமால் பாஜக தலைவர் தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜன.31-ம் தேதி வரை சிறு, குறு விவசாயிகள் 16,43,347 பேர் பெற்றிருந்த பயிர் கடன்கள் ரூ.12,110.74 கோடி தள்ளுபடிக்கான தொகையை ஒதுக்கினார்.
மேலும்,, 2021-22-ம் ஆண்டில் முதல்முறையாக ரூ.10,635.37 கோடி பயிர் கடன்களை 15,44,679 விவசாயிகளுக்கு இந்த அரசு வழங்கியது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.61,007.65 கோடி பயிர் கடன்கள் 79,18,350 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பயிர்க்கடன்களை குறிப்பிட்ட காலத்துக்குள் முறையாக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை தமிழக அரசே செலுத்தி வருகிறது.
புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றக் காலங்களில் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் எதையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தராமல் சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடுத்து, தான் குழம்புவது மட்டுமின்றி, மக்களையும் குழப்பும் நோக்கில் செயல்படும் அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.