ஸ்டாலின் குடும்ப வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என அதிமுகவின் ஜெயலலிதா பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான, பேரவையின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், பேரவையின் மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
எம்ஜிஆர், ஜெயலலிதாவை கண்டு திமுகவும், கருணாநிதியும் எப்படி அஞ்சி நடுங்கினார்களோ, அதைப்போலவே, பழனிசாமியின் பணிகளை கண்டு ஸ்டாலினின் திமுக அரசும் அஞ்சி நடுங்கி வருகிறது. ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் நலதிட்ட உதவிகள், விளையாட்டு போட்டிகள், அன்னதானம், ரத்த தானம், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
மாநில உரிமைகள் பறிபோனதற்கு முழு காரணமாக திமுக உள்ளது. திமுக எப்போது ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அமைதிக்கு குந்தகம் ஏற்படுகிறது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சட்ட விரோத ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வரும் ஸ்டாலின் குடும்ப அரசியலுக்கு முடிவுகட்டப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மகளிரணி செயலாளர் பா.வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.கோகுலஇந்திரா, வைகைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.