அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவுக்கு மேரிலேண்ட் மற்றும் சியாட்டில் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.
கடந்த 1865-ம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அப்போது அந்த நாட்டில் அடிமைகளாக வசித்த கருப்பின மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த 1868-ம் ஆண்டில் பிறப்பு குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதாவது சட்டவிரோதமாக குடியேறியவர்கள், கல்வி, வேலைவாய்ப்புக்காக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் குழந்தை பெற்றால்கூட அந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.
கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பிறப்பு குடியுரிமை நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு வரும் 20-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜனநாயக கட்சி ஆளும் 22 மாகாணங்களின் அரசுகள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. சில தொண்டு அமைப்புகள் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
இதன்படி மேரிலேண்ட் பெடரல் நீதிமன்றத்தில் 2 தன்னார்வ தொண்டு அமைப்புகள், வெளிநாடுகளை சேர்ந்த 5 கர்ப்பிணிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை கடந்த 5-ம் தேதி விசாரித்த மேரிலேண்ட் பெடரல் நீதிமன்றம், பிறப்பு குடியுரிமை ரத்து உத்தரவுக்கு தடை விதித்தது.
2-வது நீதிமன்றம்: அதிபர் ட்ரம்பின் பிறப்பு குடியுரிமை ரத்து உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினொய், ஒரிகன் ஆகிய மாகாண அரசுகள் சியாட்டில் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் கிளார் கஹனோர், அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு 14 நாட்கள் தடை விதித்தார்.
இதைத் தொடர்ந்து சியாட்டில் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமெரிக்க அதிபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடும்போது, “அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு மட்டுமே தடை உத்தரவு பொருந்தும். அமெரிக்க குடிமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்று வாதிடப்பட்டது.
ஜனநாயக கட்சி ஆளும் மாகாணங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறும்போது, “அமெரிக்காவை நிர்மாணித்த முன்னோர்கள் இயற்றிய சட்டத்தின்படி நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்கப்படுகிறது. இதை மாற்றுவது சட்டவிரோதம்” என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதி ஜான் கிளார் கஹனோர் கூறியதாவது: அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறது. இது அடிப்படை உரிமை. இதனால்தான் சர்வதேச அளவில் அமெரிக்கா உயர்ந்து நிற்கிறது. அதிபரின் ஓர் உத்தரவால் அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு தடை விதிக்க முடியாது. அதிபரின் உத்தரவு சட்டவிரோதம். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ஜான் கிளார் கஹனோர் உத்தரவிட்டார்.
மேரிலேண்ட் மற்றும் சியாட்டில் பெடரல் நீதிமன்றங்களின் உத்தரவை எதிர்த்து அதே நீதிமன்றங்களில் அமெரிக்க நீதித் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் யு.எஸ். 9-வது சர்க்கியூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.