இம்பால்,
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில், முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மாநில காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரட்டை இன்ஜின்களில் ஒன்றை பிரம்மாஸ்திர ஏவுகணை நிச்சயமாக தாக்கும்! காங்கிரஸ் கட்சி விரைவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
இருப்பினும் இது தொடர்பான முழு விவரங்களை அவர் வெளியிடவில்லை. மொத்தம் 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபையில், காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏ.க்களும், மற்றொரு எதிர்க்கட்சியான தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
அதே சமயம், ஆளும் பா.ஜ.க. கட்சிக்கு மணிப்பூர் சட்டசபையில் 32 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், 5 எம்.எல்.ஏ.க்களை கொண்ட நாகா மக்கள் முன்னணி மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஜே.டி.யு. ஆகிய கட்சிகள் பா.ஜ.க.விற்கு ஆதரவாக உள்ளன. இதுதவிர குக்கி மக்கள் கூட்டணிக்கு 2 எம்.எல்.ஏ.க்களும், 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் மணிப்பூர் சட்டசபையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.