சென்னை: உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜை சேர்ந்தவர் வந்திதா பாண்டே. தமிழக கேடரில் 2011-ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வு பெற்று தமிழகத்தில் பணியாற்றி வருகிறார். 2016-ல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று கரூர் மாவட்டத்தில் பணியாற்றியபோது, சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக, பிரபல அரசியல் பிரமுகரின் பினாமி வீட்டில்வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடியை பறிமுதல் செய்தார்.
அதே தேர்தலில் கண்டெய்னரில் வந்த ரூ.570 கோடியை மடக்கி பிடித்ததில் இவர் முக்கிய பங்காற்றினார்.
திருச்சி டிஐஜி வருண் குமாரை திருமணம் செய்து கொண்ட வந்திதா பாண்டே, தற்போது திண்டுக்கல் டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.