நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2024: பிசினஸ் சாதனையாளர்கள் சொன்ன வெற்றிச் சூத்திரங்கள்..!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது 2024 நிகழ்வு பிப்ரவரி 7-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், தொழிலதிபர்கள் உள்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடக்க உரையில் பேசிய விகடன் குழும மேலாண் இயக்குநர் சீனிவாசன், “உலகத் தமிழர்களுக்கு முதலீடு, சேமிப்பு, காப்பீடு, கடனுதவி என ஒவ்வொரு குடும்பத்துக்குமான நிதி ஆலோசனைகளை வழங்குவதற்காக விகடன் நிறுவனம் ‘லாபம்’ எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது” என்பதை குறிப்பிட்டார்.

`ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்துக்கு…’

அடுத்ததாக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டில் உள்ள டிஜிட்டல் பொருளாதார வாய்ப்புகள் பற்றி பேசினார். அவர், “இன்று உலகில் பொருளாதாரத்தில் மிக வேகமாகவும், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் இருக்கும் தொழில் துறை தகவல் தொழில்நுட்பம். இப்போது நாம் ஜெனரேட்டிவ் ஏ.ஐ காலத்தில் இருக்கிறோம். ஐ.டி துறையின் நல்லது, கெட்டது இரண்டுமே அதன் அசாத்திய விரிவாக்கத் திறன்தான். இன்று நிறைய தனி கம்பெனிகளின் மார்க்கெட் கேப் இந்தியப் பொருளாதாரத்தை விட ஜாஸ்தியாக இருக்கிறது. இது ஒரு அசாத்தியமான வளர்ச்சி. ஒரே ஒரு நிறுவனம் தனது பேலன்ஸ் ஷீட்டில் 1 ட்ரில்லியன் டாலர் ரொக்கப் பணம் வைத்திருக்கிறது. நாம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை வேகமாக எட்ட வேண்டுமென்றால், ஐ.டி துறையில் புத்தாக்கங்களை செய்ய வேண்டும்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

இதுபோன்ற புரட்சிக்கு தேவை மனித மூலதனம்தான். தமிழ்நாட்டில் உலகிலேயே சிறந்த மனித மூலதனம் இருக்கிறது. உலகிலேயே சிறந்த மனித வளம் நம்மிடம் இருக்கிறது. உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் எல்லா பக்கமும் தமிழர்கள் இருக்கின்றனர். ஏ.ஐ தொழில்நுட்பம் ஒவ்வொரு சில மாதங்களுக்கும் மாறி வருகிறது. இப்படி மாறி வரும் தொழில்நுட்பத்தை எப்படி நம் இளைஞர்கள் கற்றுக்கொள்ளப்போகின்றனர் என்பது முக்கியம். தொழில்நுட்ப மாற்றங்களை சமாளிப்பதற்காக இளைஞர்களுக்கு ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தொடுவதற்கு தொழில்நுட்பத் துறைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கப்போகிறது” என்று பேசினார்.

கேரட்லேன் நிறுவனர் மிதுன் சச்செட்டி

அடுத்து விருதுகள் வழங்கப்பட்டன. கேரட்லேன் நிறுவனத்தின் நிறுவனர் மிதுன் சச்செட்டிக்கு ‘பிசினஸ் அவுட்லையர்’ விருதை அமைச்சர் பி.டி.ஆர் வழங்கினார். ’ஜெய்ப்பூர் ஜெம்ஸ்’ எனும் வைர வியாபாரக் குடும்பத்தில் பிறந்த மிதுன் சச்செட்டி, வெளிநாட்டில் வைர நகைகள் தொடர்பான மேற்படிப்பு முடித்து இந்தியா திரும்பினார். 2008-ல், ரூ.1 கோடி முதலீட்டில், சீனிவாச கோபாலுடன் இணைந்து ‘கேரட்லேன்’ நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆன்லைன் வைர ஆபரண வியாபாரத்தில் சிறப்பாக வளர்ந்தது கேரட்லேன். டாட்டாவின் டைட்டன் நிறுவனம் டீல் பேச, கேரட்லேனை ரூ.17 ஆயிரம் கோடிக்கு விற்றார்.

மிதுன் சச்செட்டி

விருதை பெற்றுக்கொண்ட மிதுன் சச்செட்டி, “எனது மகள் பிறந்தபோதுதான் கேரட்லேனும் பிறந்தது. அதை விலைக்கு கேட்டபோது எமோஷனலாக இருந்தது. டாடாவும், தமிழ்நாடு அரசும் பார்ட்னர்களாக இருக்கும் டைட்டன் நிறுவனத்திடம் கேரட்லேன் நிறுவனத்தை கொடுத்துவிட்டோம். கேரட்லேன் எனது மகளை போன்றது. அதற்கு இப்போது திருமணமாகி வேறு இடத்துக்கு போய்விட்டதாக கருதுகிறேன்” என பேசியபோது, அரங்கில் கைதட்டல்களுடன் சிரிப்பலை!

டெக்டான் குரூப் மேலாண் இயக்குநர் எஸ்.லக்ஷ்மணன்

’செல்ஃப் மேட் ஆந்த்ரபிரனர்’ விருதை டெக்டான் குரூப்பின் மேலாண் இயக்குநர் எஸ்.லக்ஷ்மணனுக்கு அமைச்சர் பி.டி.ஆர் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த லக்ஷ்மணன் படிப்பில் ஷார்ப். மதுரை, தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் முடித்தபோது, எல்& டி நிறுவனத்தில் வேலை, அடுத்தடுத்து புரொமோஷன் என்று சீரான வளர்ச்சி. அடுத்த கட்டமாக லிபியா நாட்டில் வேலை கிடைக்க, அங்கே பறந்தார்.

லக்ஷ்மணன்

நண்பரைப் பார்ப்பதற்காக துபாய் வந்தவருக்கு, துபாய் ரொம்பவே பிடித்துப்போக, அங்கேயே வேலையிலும் சேர்ந்தார். சிக்கலில் இருந்த ஒரு புராஜக்ட்டை, வழக்கம்போல தன்னுடைய திறமையால், வெற்றிகரமாக முடித்துக் காட்டினார். அதற்குப் பரிசாக கிடைத்தது சி.இ.ஓ பதவி. அப்போது அவருடைய வயது 27. பிறகு அவரே சொந்தமாக தொடங்கிய டெக்டான் நிறுவனம், இந்தியா உள்பட 15 நாடுகளில் நீர்த்தொழில்நுட்பத்தில் ‘எண்ட்-டு எண்ட்’ சேவை தரும் தொழிலை செய்து வருகிறது. இன்று உலகளவில் 20 நிறுவனங்களை நடத்தி வருகிறார். தமிழ்நாடு உள்பட இந்தியாவில் கடல்நீரை குடிநீராக்கும் எட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது இவரது நிறுவனம்.

விருதை பெற்றுக்கொண்ட லக்ஷ்மணன், “நான் 27 வயதில் சி.இ.ஓ-வாக பதவிக்கு வந்தேன். 10 ஆண்டுகளாக சி.இ.ஓ பணியில் இருந்துவிட்டு, அடுத்து புரமோஷன் வேண்டும் என கேட்டபோது, என் நிறுவனத்தின் ஓனர், ’இனி எனது சீட் மட்டும்தான் இருக்கிறது. அந்த சீட் வேண்டுமா?’ என கேட்டார். அதற்கு நான், ’நோ.. நோ. நான் எனது சொந்த சீட்டை உருவாக்கிக் கொள்கிறேன்’ என்று கூறினேன். நானே சொந்தமாக பிசினஸ் தொடங்கினேன்” என்றார்.

அடையார் ஆனந்த பவன் சகோதரர்கள்

அடையார் ஆனந்த பவன் சகோதரர்கள் கே.டி.வெங்கடேசன் மற்றும் கே.டி.ஸ்ரீனிவாச ராஜாவுக்கு ’ஃபீனிக்ஸ் பிசினஸ்’ விருது வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை பூர்விகமாகக் கொண்ட விவசாயக் குடும்பத்தை சேர்ந்த அடையார் ஆனந்த பவன் சகோதரர்களின் தொழில் பரமபதத்தில் ஏணிகள் மட்டுமே என்றாக, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா என வெளிநாடுகள் உட்பட 150 கிளைகள், 12,000-க்கும் அதிகமான பணியாளர்கள், கோடிகளில் டர்ன் ஓவர் எனப் பறந்தது கொடி. ஆனால், கொரோனா சூழல் முற்றிலும் பிசினஸை முடக்கியது. குடும்பச் சொத்துகளையெல்லாம் விற்று கிட்டத்தட்ட ஓராண்டு வரை பணியாளர்களுக்குச் சம்பளம், நிர்வாக செலவுகள் என சமாளித்தனர்.

அடையார் ஆனந்த பவன் சகோதரர்கள்

கொரோனாவுக்குப் பின், வேகத்துடன் விட்டதைப் பிடித்ததுடன், 2000 கிளைகள் என்ற இலக்கோடு வீறுநடைபோடுகிறது அடையார் ஆனந்த பவன். விருதை பெற்றுக்கொண்ட பின் ஸ்ரீனிவாச ராஜா பேசியபோது, “வயிற்று பசிக்காக வந்தோம். தென்னிந்திய உணவு முறை நமது முன்னோர்களின் ஃபார்முலா. அடையாரில் ஆரம்பித்து அமெரிக்கா வரை சென்றுவிட்டோம். எங்கள் நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உணவுத் துறைக்கு கிடைத்த வெற்றியாக இந்த விருதை கருதுகிறோம்” என்று பேசினார்.

ஒளிரும் ஈரோடு

அடுத்து ‘ஒளிரும் ஈரோடு’ அறக்கட்டளைக்கு ’சோஷியல் கான்ஷியஸ்னஸ்’ விருது வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தை உலக அளவில் வளர்ந்த, சிறந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்பதே ஒளிரும் ஈரோடு அமைப்பின் நோக்கம். கிட்டத்தட்ட 90-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து நடத்திவரும் இந்த அறக்கட்டளை, 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த பத்தாண்டுகளில் சுற்றுச்சூழல், கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், சமூக முன்னேற்றம் என அனைத்து பரிமாணங்களிலும் ஈரோடு மாவட்டத்தை மேம்படுத்தும் முயற்சிகளை எடுத்துவருகிறார்கள். தரமான குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, குளங்களைத் தூர்வாருவது, அணை கட்டுவது, நீர்நிலைகளில் ஆலைக் கழிவுகள் கலக்காமல் மாற்று ஏற்பாடுகளைச் செய்வது, மருத்துவமனைகளிலும், பள்ளிக்கூடங்களிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியம், கொரோனா கால உதவிகள் என நீள்கின்றன இவர்களின் சமூகப் பணிகள்.

ஒளிரும் ஈரோடு

விருதை பெற்றுக்கொண்ட ஒளிரும் ஈரோடு நிர்வாகிகள், “தனியாக செய்வதை விட கூட்டாக சேர்ந்து செய்யும்போது நிறைய செய்யலாம். ஈரோட்டை சுற்றியுள்ள நீர்வளத்தை மேம்படுத்தி இருக்கிறோம். கொரோனா காலத்தில் மருத்துவ உதவிகளை வழங்கினோம். யாரிடமும் நன்கொடை பெறாமல் நாங்களே செலவு செய்து செயல்படுகிறோம். குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குகிறோம். ஈரோடு அரசு மருத்துவமனையை கிட்டத்தட்ட தத்தெடுத்துவிட்டோம் என்று கூறலாம். 75 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து எமர்ஜென்சி வார்டு, குழந்தைகள் வார்டு போன்ற பணிகளை செய்திருக்கிறோம். நிறைய மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். காலநிலை மாற்றத்தை சமாளிக்க ஒரே வழி மரங்களை நடுவதுதான்” என கூறியது சிந்திக்க வேண்டிய விஷயம்.

அக்னிகுல் காஸ்மோஸ்

அக்னிகுல் காஸ்மோஸ்

அடுத்து, ’ஸ்டார்ட் அப் சாம்பியன்’ விருது அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் ஸ்ரீநாத் ரவிச்சந்திரன், மொய்ன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த விருதை பெற்றுக்கொண்டனர். இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ தமிழகத்தில் உருவான நிறுவனம் என்பது நமக்கு பெருமையான விஷயம். 2017-ம் ஆண்டு ’அக்னிகுல்’ ஸ்டார்ட்அப்-ஐ உருவாக்கி, மைக்ரோ அண்ட் மினி சாட்டிலைட்டுகளை விண்ணில் ஏவும் உலகின் முதல் சிங்கிள் பீஸ் ராக்கெட் இஞ்சின்களை 3டி பிரின்டிங் மூலம் உருவாக்கியவர்களுக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏவுதளம் ஒதுக்கப்பட்டுள்ளது.

StartUpTN

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டி வரும் StartUpTN நிறுவனத்துக்கு ’பிசினஸ் மெண்டார் (இன்ஸ்டிடியூஷன்)’ விருது வழங்கப்பட்டது. 10 முக்கிய நகரங்களில் ஸ்டார்ட் அப் ‘ஹப்’களை அமைத்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஸ்டார்ட் அப் ஐடியாக்களை வரவேற்று, மெருகேற்றி, பிசினஸ் வடிவம் கொடுத்து, முதலீட்டு உதவிகளையும் செய்வதோடு, சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது இந்த நிறுவனம். முன்பு, 2,300 என்பதுதான், தமிழ்நாட்டு ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை. ஆனால், StartUpTN தொடங்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் 10,300 என வளர்ச்சி கண்டுள்ளது. StartUpTN நிறுவனத்தின் சி.இ.ஓ சிவராஜா ராமநாதனுக்கு இந்த விருதை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். விருதை பெற்றுக்கொண்ட சிவராஜா ராமநாதன், “மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த காலத்தில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களாக இருந்தாலும், கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும், இன்னொவேஷன் இன்றியமையாதது. ஒரு சிறிய மாற்றம். 1 மில்லியன் டாலர் மதிப்பு (valuation) கொண்ட யுனிகார்ன்களை உருவாக்குவதை விட, சுமார் 80 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் நிறுவன மதிப்பு (Enterprise Value) கொண்ட நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று கூறினார்.

StartUpTN

ஐ.ஐ.டி ஏரோஸ்பேஸ் பேராசிரியர் சத்யநாராயணன்

‘பிசினஸ் மெண்டார்’ விருது ஐ.ஐ.டி (சென்னை) ஏரோஸ்பேஸ் பேராசிரியர் சத்யநாராயணன் சக்ரவர்த்திக்கு வழங்கப்பட்டது. ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் துறையின் பேராசிரியரான இவர், வகுப்புகளுக்கு வெளியே தொழில் ஐடியாக்களோடு வரும் இளைஞர்களுக்கு பிசினஸ் அறிவூட்டி வளர்த்தெடுக்கிறார். கேஸ் டர்பைன், எலெக்ட்ரிக் ஏர்கிராஃப்ட், ராக்கெட் இன்ஜின் போன்றவை சார்ந்த ஸ்டார்ட்-அப்களுக்கு இவர்தான் வழிகாட்டி ஐஐடி-யின் நேஷனல் கம்பஷன் ரிசர்ச் & டெவலப்மென்ட் மையத்தின் தலைவரான இவர், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பக்கபலமாக இருந்து கடந்த 10 வருடங்களில் திரட்டியிருக்கும் தொகை 30 மில்லியன் டாலர். The ePlane Company, அக்னிகுல் காஸ்மோஸ், ஏரோஸ்ட் ரோவிலோஸ் போன்ற வெற்றிமுக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மென்டார் மூளை இவருடையதுதான்.

சத்ய நாராயணன் சக்ரவர்த்தி

விருதை பெற்றுக்கொண்ட சத்ய நாராயணன் சக்ரவர்த்தி பேசியபோது, “ஒரு நல்ல ஐடியாவால் நாட்டுக்கும், உலகிற்கும் நல்லது” எனக்கூறி இன்றைய காலகட்டத்தில் ஐடியாக்களின் முக்கியத்துவத்தை நமக்கு புரிய வைத்தார்.

நாகா ஃபுட்ஸ்

அடுத்து, நாகா ஃபுட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் சவுந்தர் கண்ணனுக்கு ‘பிசினஸ் இன்னொவேஷன்’ விருது வழங்கப்பட்டது. கோதுமை, ரவா, மைதா நம் உணவில் வழக்கமானவை. இதையொட்டிய தொழிலில் என்ன புதுமை செய்துவிட முடியும் என்றால் ‘நாகா’ என்றே பதில் சொல்லலாம். மும்பையிலிருந்து கோதுமை மாவு, மைதா மாவு வாங்கி விற்கும் சாதாரண ஒரு ஏஜென்டாக இருந்த ஶ்ரீனிவாசன் செட்டியார், அந்தத் தொழிலை தானே ஆரம்பிக்க முடிவெடுத்து, சென்னையில், ’நாகா’ என்கிற பெயரில் 1962-ல் கோதுமை அரவை ஆலையைத் தொடங்கினார். சில ஆண்டுகளிலேயே அடுத்தடுத்த மில்களை திறக்கும் அளவுக்கு வளர்ந்தார்.

பிசினஸை மேலும் மேலும் வளர்த்தெடுக்க பலரும் பெருநகரங்களுக்கு நகர்வதுதான் வாடிக்கை. ஆனால், இவரோ ’நாகா’வை திண்டுக்கல்லுக்கு மாற்றினார். மாவு மில்லாக தொடங்கிய ’நாகா’, இன்று கோதுமை, ரவை, மைதா ரீடெய்ல் பிரிவில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உச்சம் தொட்டிருக்கிறது. வெரைட்டி, டேஸ்ட், பேக்கிங், மார்க்கெட்டிங் என அனைத்திலும் புதுமைகளைப் புகுத்தியதுதான் ’நாகா’ செய்த மேஜிக்.

நாகா ஃபுட்ஸ்

ஶ்ரீனிவாசனின் மகன் கமலக்கண்ணன், இந்தத் தொழில் பிரிவில் இந்தியாவில் யாரிடமும் இல்லாத அளவுக்கு சிறப்பான ஆராய்ச்சி வசதியை தங்கள் நிறுவனத்துக்கு ஏற்படுத்தினார். ஆண்டுக்கு 3 லட்சம் டன் கோதுமையை அரைக்கும் திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப ஆலைகள், ஐ.டி.சி, பிரிட்டானியா, பார்லே போன்ற நிறுவனங்களுக்கு சப்ளை செய்வதில் முன்னணி என இந்த சாம்ராஜ்யத்தின் வீச்சு பெரியது. 50 ஆயிரம் ரீடெய்ல் அவுட்லெட்கள், நிறுவனங்கள், அரசுத் துறைகள் வரை நீள்கிறது இவர்கள் விற்பனை.

கோதுமையில் தொழிலை ஆரம்பித்து பாஸ்தா, ஒயாலோ பீட்ஸா வரை தமிழ்நாட்டு கிச்சன்களில் மட்டுமல்ல, ரயில், விமான பயணங்களிலும் கூட பல வெரைட்டிகளிலும் இடம்பிடித்திருக்கிறது நாகா ஃபுட்ஸ். விருதைப் பெற்றுக்கொண்ட சவுந்தர் கண்ணன் பேசியபோது, “இந்த குறிப்பிட்ட விருதை பெறுவதில் மகிழ்ச்சி. 80 ஆண்டுகளாக பிசினஸ், 60 ஆண்டுகளாக உற்பத்தியில் இருந்து, ஒரு புதுமையை செய்கிறோம் என்றால் அது சரியா தவறா என்ற சந்தேகத்தில்தான் செய்கிறோம். அந்தப் புதுமையை விகடன் பார்த்து பாராட்டும்போது எங்களுக்கு மறுமதிப்பீடு கிடைக்கிறது” என்று இன்னொவேஷனுக்கு கிடைத்த அங்கீகாரத்தை பற்றி பேசினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் சீனிவாசன் நினைவுப் பரிசு வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.