புதுடெல்லி: மகா கும்பமேளாவுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த 68 இந்துக்கள் புனித நீராடினர். முன்னதாக, அவர்கள் தாங்கள் கொண்டுவந்த இறந்தவர்களின் 480 அஸ்தி கலசங்களையும் உத்தராகண்டின் ஹரித்துவாரில் கரைத்தனர்.
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவுக்கு பாகிஸ்தானியர்களும் வருகை புரிந்துள்ளனர். இந்நாட்டு பஞ்சாபின் சிந்து மாகாணத்திலுள்ள பாகிஸ்தானிய இந்துக்களில் 68 பேருக்கு இதற்கான அனுமதி கிடைத்திருந்தது.
பஞ்சாபின் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்தவர்கள், அங்கிருந்து ரயில் மூலம் ஹரித்துவாருக்கு சென்றனர். அங்கு தங்களுடன் கொண்டுவந்த 480 கலசங்களில் இறந்தவர்களின் அஸ்தியை கொண்டு வந்தனர். இதை புனித நகரமான ஹரித்துவாரின் கங்கையில் கரைத்துவிட்டு தங்களது ஆன்மிகக் கடன்களை முடித்தனர். அங்கிருந்து மீண்டும் ரயில் மூலம் பிரயாக்ராஜ் வந்திருந்தனர்.
இவர்கள் அனைவரும் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவின் ஏற்பாடுகளை கண்டு வியந்தனர். அங்குள்ள அரசு கூடார முகாமில் தங்கியவர்கள் பின்னர் புனித நீராடினர். இந்தியாவில் நுழைந்தது முதல் அவர்களது வருகைக்கான முழு ஏற்பாடுகளையும் உத்தரப் பிரதேச அரசு செய்திருந்தது.
மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் அரசிடம் 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியா செல்ல அனுமதிக்கான விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 68 பேருக்கு மட்டும் அனுமதி கிடைத்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் இந்துக்கள் கூறும்போது, ‘எங்கள் மூதாதையர்கள் பலரும் கும்பமேளாவுக்கு செல்ல பல முறை முயன்றும் முடியவில்லை. எங்களது சிறுவயதில் கேள்விப்பட்ட கும்பமேளாவைக் காண இப்போதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு நாம் கோயில்களுக்கு செல்லவும் முழு சுதந்திரம் கிடைப்பதில்லை. இங்கு வந்து இந்துக்கள் காக்கும் சனாதனத்தின் புகழை கண்டு வியந்துள்ளோம்.
இந்திய அரசின் ஒத்துழைப்பால் எங்களுக்கு விசாவும் கிடைத்தது. இந்த வாய்ப்பை எங்களுக்கு அளித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்தனர்.
ஒரே குழுவாக வந்த இந்த 68 பாகிஸ்தானியர்களும் ஒன்றாகவே திரும்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இவர்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு பலருக்கும் இந்தியா செல்ல சில காரணங்களால் பாகிஸ்தான் அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக, வாய்ப்பை இழந்தவர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் அஸ்தியை 68 பேரிடம் கொடுத்து அனுப்பியிருந்தனர்.
இந்த அஸ்திகளை அவர்கள் சார்பில் இந்த 68 பேர் குழு ஹரித்துவாரில் கரைத்து கடன்களை முடித்துள்ளது. இதுபோல் கும்பமேளாவுக்காக பாகிஸ்தானியர்கள் பிரயாக்ராஜின் நீண்ட வருடங்களுக்கு பின் முதன்முறையாக வருகை தந்துள்ளனர்.