ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில் திமுகவுக்கு அதிகபட்சமாக 197 வாக்குகள் கிடைத்துள்ளன. இரண்டாவதாக, 18 வாக்குகள் செல்லாதாவையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நாதக வேட்பாளருக்கு 13 தபால் வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளையும், அதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி நடந்து வருகிறது. இதுவரையிலான நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்நிலையில் இத்தேர்தலில் பதிவான தபால் வாக்கு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில், மொத்தமுள்ள 251 தபால் வாக்குகளில் திமுக வேட்பாளருக்கு 197 வாக்குகள் கிடைத்துள்ளன. இதிலும் 8 பேர் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று நோட்டாவை (NOTA) தேர்வு செய்துள்ளனர்.
தபால் வாக்கு விவரங்கள்:
- மொத்த வாக்குகள் – 251
- செல்லாதவை – 18
- திமுக – 197
- நாம் தமிழர் – 13
- மறுமலர்ச்சி ஜனதா கட்சி – 2
- சாமானிய மக்கள் கட்சி – 2
- சமாஜ்வாடி கட்சி – 1
- அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் – 1
- அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி – 1
- சுயேச்சைகள் – 8
- நோட்டா – 8
திமுக Vs நாதக: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 13 வேட்பாளர்கள் மற்றும் 31 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.