புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 1 மணி நிலவரப்படி 6.31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
70 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுடெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே முக்கிய போட்டி இருந்தது. இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
டெல்லியில் 1998 முதல் 2013 வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி. அதன் பிறகு அக்கட்சி, ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறை தனித்துப் போட்டியிட்டது.
எனினும், இந்த தேர்தலில் போட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே மட்டுமே இருந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பகல் ஒரு மணி நிலவரப்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 2 தொகுதிகளில் வெற்றி, 45 தொகுதிகளில் முன்னிலை என 47 தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பில் உள்ளது. இக்கட்சி, அதிகபட்சமாக 46.63% வாக்குகளைப் பெற்றுள்ளது.
பாஜகவுக்கு கடும் போட்டியை அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி 21 தொகுதிகளில் முன்னிலை என 23 தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பில் உள்ளது. இக்கட்சி, இரண்டாவது அதிகபட்சமாக 43.35% வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஒரு மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலையில் இல்லை. அதோடு, அது 6.37% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. டெல்லி தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சி பெற்ற மிகக் குறைந்த வாக்கு சதவீதமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.