“ஈரோடு கிழக்கில் நிராகரிக்கப்பட்ட நாதகவின் வெறுப்பு அரசியல்” – முத்தரசன் கருத்து

சென்னை: “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு, அடுத்து வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும் என்பதற்கான முன்னறிவிப்பைத் தந்துள்ளது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆதரவுடன் களம் இறங்கிய திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொகுதி வாக்காளர்களின் ஒருமுகமான ஆதரவைப் பெற்று, மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும், 2023 இடைத்தேர்தலிலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றது. இந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலின் அரசியல் முக்கியத்துவம் கருதி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஒருமனதாக அறிவிக்கப்பட்டார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வலிமையும், தமிழ்நாடு அரசின் சாதனைகளும் மக்களின் பேராதரவு பெற்றிருப்பதை அறிந்த அதிமுக தேர்தல் களத்திற்கே வராமல் ஒதுங்கிக் கொண்டது. சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் பெரியார் ஈவெரா குறித்தும், திராவிட இயக்க கருத்தியல் மற்றும் நோக்கங்களை இழிவுபடுத்தி, அவமதித்து, அநாகரிக அரசியலை முன்னெடுத்த நாம் தமிழர் கட்சியின், சங் பரிவார் கும்பலுக்குரிய வெறுப்பு அரசியலை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் முற்றாக நிராகரித்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு (2026) நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறப்போகும் வரலாறு காணாத வெற்றிக்கு கட்டியம் கூறியுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும், கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட்ட தலைவர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.