புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மாலை 4.40 மணி நிலவரப்படி 40 தொகுதிகளில் வெற்றி, 8 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் பாஜக உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 18 தொகுதிகளில் வெற்றி, 4 தொகுதிகளில் முன்னிலை என 22 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.
இந்த தேர்தலில், அரவிந்த் கேஜ்ரிவால் தான் போட்டியிட்ட புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங்கிடம் தோல்வி அடைந்தார். ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியாவும் தோல்வி அடைந்தார். இந்நிலையில், தேர்தல் முடிவு குறித்து கேஜ்ரிவால் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியாவில், “மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் வெற்றிக்கு வாழ்த்துகள்.
டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை பாஜக நிறைவேற்றும் என்று நம்புகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். நாங்கள் அதிகாரத்துக்காக அரசியலில் இல்லை. மாறாக, மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு தலமாகவே நாங்கள் அதிகாரத்தைக் கருதுகிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரசு ஊழியரான அரவிந்த் கேஜ்ரிவால், அன்னா ஹசாரே டெல்லியில் நடத்திய ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து பின்னர், ஊழல் ஒழிப்பை மையமாக வைத்து ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினார். 2013-ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, முதல் முயற்சியிலேயே காங்கிரஸை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது. கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கேஜ்ரிவால் முதல்வரானார்.
எனினும், டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றார். ஜாமினில் வெளியே வந்த கேஜ்ரிவால், கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அதிஷி முதல்வராகப் பொறுப்பேற்றார். தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கை தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) பதிவு செய்த வழக்கில் கேஜ்ரிவால் தற்போது ஜாமீனில் உள்ளார். ஆம் ஆத்மியின் தோல்வியை அடுத்து, 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் தலைநகரில் ஆட்சிக்கு வர உள்ளது.