நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைக்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திட்டமா?

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸில் வலுவான நிலையில் இருந்து, படிப்படியாய் உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்த என்.ரங்கசாமி, ஒரு கட்டத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் தனித்து இயங்க விரும்பினார். கடந்த 2011-ம் ஆண்டு ‘என்.ஆர்.காங்கிரஸ்’ என்று புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே மீண்டும் ஆட்சி யைப் பிடித்தார்.

அதன்பின் 2016 சட்டப்பேரவைத் தேர்த லில் என்.ஆர்.காங்கிரஸ் தோல்வியைத் தழுவ எதிர்க்கட்சித்தலைவரானார் ரங்கசாமி . 2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி யில் போட்டியிட்டு வென்று, என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் அமைந்தது.

இந்நிலையில் புதுச்சேரியின் ஆளுங் கட்சியான என்.ஆர்.காங்கிரஸின் 15-ம் ஆண்டு விழா, புதுச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும் முதல்வருமான ரங்கசாமி, ‘வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும்’ என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை உருவாக்கியுள்ளது. தற்போது, முதல்வர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரு கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான புதுச்சேரி தலைவராக ரங்கசாமி இருந் தாலும், பாஜக எம்எல்ஏக்களுக்கு வாரியத் தலைவர் பதவிகளை தர வில்லை. மாநில அந்தஸ்து உட்பட பல விஷயங்களுக்காக டெல்லிக்கும் அவர் செல்லவில்லை.

எனினும், பாஜக தலைமையானது அடுத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணியை தொடரவே விரும்புகிறது. அதே நேரத்தில், ‘தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும்’ என்று ரங்கசாமி திடீரென தனித்து அறிவித்திருப்பது இக்கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் செல்வாக்கு: புதுவையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காரைக்காலை ஒட்டியுள்ள நாகை, மயிலா டுதுறை மற்றும் சேலம் ஆகிய தமிழக பகுதிகளில் முதல்வர் ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. அவர் சார்ந்த சமூகத்தினரும் அதிகளவில் உள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள இப்பகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி யிடலாம் என்று, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மறைந்த பொதுச்செயலாளர் பாலன் தெரிவித்திருந்தார். கடந்த தேர்தலில்,ரங்கசாமியும் இதற்கான பணிகளை தொடங்க திட்டமிட்டார்.

தற்போது வெளிப்படையாக இதை அறிவித்திருக்கிறார். இவர்,இப்படி அறிவிக்க தவெக தலைவர் விஜய்யும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “தமிழகத்தில் தற்போது தவெகவைத் தொடங்கி ஓராண்டு நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்க மானவர்.

இதற்கு தவெகவின் பொதுச் செயலாளராக உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்தும் ஓர் காரணம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, சென்னை பனையூரில் நடிகர் விஜய்யை முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு நடிகர் விஜய், முதல்வர் ரங்கசாமியை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். இவர்களுக்கு இடையே உறவு பாலமாக புஸ்ஸி ஆனந்த் செயல் பட்டு வருகிறார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியபோது அதற்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அத்துடன், தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் பூஜை செய்த சிலவற்றை புஸ்ஸி ஆனந்திடமும் அளித்தார். தொடர்ந்து, விக்கிரவாண்டியில் நடந்த தவெகவின் முதல் மாநில மாநாட்டுக்கு விஜய்க்கு வாழ்த்து சொன்னது டன், தனது வீட்டில் அமர்ந்து தொலைக் காட்சியில் முழுமையாக மாநாட்டை பார்த்தார். அதை ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தினார்.

இந்தச் சூழலில், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட இருப்பதாக ரங்கசாமி அறிவித்திருப்பது, கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? புதிய கூட்டணி ஏதும் உருவாகிறதா?’ என்று முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, “அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்” என்று கூறுகிறார். ‘பாஜகவுடன் கூட்டணி தொடருமா? – விஜய் கட்சியுடன் கூட்டணியா?’ என்று அடுத்தும் கேட்க, “நான்தான் சொல் கிறேனே! – பிறகு சொல்கிறேன்” என்று மிக கவனத்துடனே பதில் தருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.