ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது 2026 தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறியுள்ளது என திமுக வேட்பாளர் சந்திரகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியது: “எதிரிகள் அத்தனை பேரும் ஒன்றாக வந்தாலும், தனித்தனியாக வந்தாலும் களத்தில் சந்திக்க தயார் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதுபோல, 75 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளரான நான் வெற்றி பெற்றுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது 2026 தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறியுள்ளது.
இந்தத் தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைதான், 2026-ல் தமிழகம் முழுவதும் வரப்போகிறது. இந்த இடைத்தேர்தலை நீங்களே சந்தித்து வெற்றி பெற்று வாருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தினார். அதன்படி, மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வெற்றி பெற வேண்டும் என்ற ‘ஈரோடு ஃபார்முலா’வை இந்த தேர்தலில் அமைச்சர் முத்துசாமி செயல்படுத்தி, பெரும் வெற்றியை திமுக தலைவருக்கு பெற்றுத் தந்திருக்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து 2026-ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின்தான் என்று சொல்லும் வகையில் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களுக்கு நன்றி” என்று அவர் தெரிவித்தார்.